மரத்தால் உருவான பிரமாண்ட ஆலயம்

தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, ‘சத்தியத்தின் சரணாலயம்’ என்பது இதன் பொருள். இந்த சத்திய சரணாலயமானது, கோவில் மற்றும் அரண்மனையின் கலப்பில் கட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட பிரமாண்டமான, வித்தியாசமான கட்டிடமாகவும் இது திகழ்கிறது.
இந்த கட்டிடத்தின் சிந்தனைக்கு சொந்தக் காரர், தாய்லாந்து நாட்டின் தொழிலதிபரான லெக் வீரியப்பன் என்பவராவார். 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணி இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும் அங்கு பொதுமக்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மரத்தால் மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தை காணச் செல்லும் மக்கள், அங்கு கட்டிடத்தின் ஒரு பாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களையும் கூட பார்க்க முடியும்.

இந்த ஆலயத்திற்குள் அயோத்தியை ஆட்சி செய்த ராமரின் வாழ்க்கை வரலாறு, புத்த மதத்தின் வரலாறு, இந்து மதத்தில் உள்ள பல்வேறு புராணங்களைக் கூறும் சிற்பங்கள் அனைத்தும் மரத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மைடீயாங், மைடாக்கியன், மாய் பஞ்சட் மற்றும் தேக்கு போன்ற மரங்களால் இந்த சத்தியத்தின் சரணாலயம் எழுப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரு மரக்கட்டைக்கும், இன்னொரு மரக்கட்டைக்குமான இணைப்பாக கூட, எந்த இரும்பு பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை. இணைப்பிற்கும் கூட மரத்தால் ஆன ‘ஆப்பு’ கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தின் உயரமான கோபுரம் 105 மீற்றர் கொண்டது. இதன் வெளிப்புறம் மேற்கூரையில் படைப்பின் கடவுளான பிரம்மாவின் முகம் மரத்தால் பெரியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆலய வடக்கு மண்டபத்தில் புத்த குவான்யின் மற்றும் ஞானம் பெற்ற பல புத்த பிட்சுகளின் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன.
தெற்கு மண்டபத்தில் நவக்கிரகங்களான சூரியன், சந்திரன் உள்ளிட்ட கிரகங்களும் செதுக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டபத்தில் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவற்றை உணர்த்தும் சிற்பங்களும் அழகுற உருவாக்கப்பட்டுள்ளன. பணி நடைபெற்று வருவதால், மக்கள் அனைவரும் இதற்குள் தலைக் கசவம் அணிவிக்கப்பட்டே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் 2025-ஆம் ஆண்டு நிறைவு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.