பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து..
மூன்று வருடங்களின் பின்னர் முதல் தடவையாக இங்கிலாந்துக்காக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததன் பலனாக கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டியில் அவரது அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை அடைந்துள்ளது.
ஆரம்ப வீரர் பில் சோல்ட் (11), டேவிட் மாலன் (20), பென் டக்கெட் (21) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க 11ஆவது ஓவரில் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 87 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால் அலெக்ஸ் ஹேல்ஸ், ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தன் மூலம் இங்கிலாந்தின் வெற்றி அண்மித்துக்கொண்டிருந்தது. (147 – 4 விக்.)
ஹேல்ஸ் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட மேலும் 13 ஓட்டங்களை ஹெரி ப்றூக் (42 ஆ.இ.), மொயீன் அலி (7 ஆ.இ.) ஆகிய இருவரும் சேர்ந்து பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் உஸ்மான் காதிர் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் 57 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் மொத்த எண்ணிக்கை 109 ஓட்டங்களாக இருந்தபோது ஹைதர் அலி (11), ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து மொஹமத் ரிஸ்வான், ஷான் மசூத் (7) ஆகிய இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். (120 – 3 விக்.)
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரிஸ்வான் 46 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார்.
மத்திய வரிசையில் இப்திகார் அஹ்மத் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து பந்துவீச்சில் லூக் வூட் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்துக்களேதுமில்லை