தமிழர்களுக்கு தைரியம் இல்லை -சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு
தமிழர்களுக்கு அறிவு உள்ளது, ஆனால், தைரியம் இல்லை
தமிழர்களுக்கு அறிவு இருப்பதாகவும், ஆனால், தைரியம் இல்லை எனவும் மதுரையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்து இருக்கிறார்.
மதுரையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமியின் 83 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ராமர் யாரென்று கேட்ட கருணாநிதி
கருணாநிதி என்னிடம் திராவிடம் என்று கூறினார். அது சமஸ்கிருத மொழி என்று, உங்கள் பெயரிலும் 40% சமஸ்கிருதம் இருக்கிறது என்று கூறி ஒரு புத்தகத்தை விளக்கினேன். உதயசூரியன் என்ற உங்கள் கட்சியின் பெயரும் சமஸ்கிருதம் என்று தெரிவித்தேன். திராவிடம் என்றால் முக்கடல் சங்கமிக்கும் இடம் என்று பொருள்.
சேது சமுத்திர திட்டம் கொண்டு வர முயன்றபோது ராமர் யாரென்று கருணாநிதி என்னிடம் கேட்டார். மறுநாளே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரிடம் “கெட் வெல் சூன்” என்று கூறி ராமர் யார் என தெரிகிறதா என்று கேட்டேன்.
விடுதலை புலிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது
இந்திய ,இராணுவத்தினரை கொலை செய்த விடுதலை புலிகளுக்கு இங்கே சிகிச்சை அளிக்க கூடாது என சொன்னேன். உதவினால் ஆட்சி கலைக்கப்படும் என்று எச்சரித்தேன். இரத்த ஆறு ஓடும் என்றார் கருணாநிதி. 1991 ல் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஒரு சைக்கிள் கூட எரியவில்லை. அடுத்த தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது திமுக.
கருணாநிதி தனது மகனுக்கு தமிழில் பெயர் வைக்காமல் ஸ்டாலின் என ரஷ்ய பெயரை வைத்துள்ளார். தமிழ் தாய்மொழி. இந்தியை கற்றுக்கொள்வதில் என்ன தவறு உள்ளது. கற்றுக்கொள்பவர்களை ஏன் தடுக்கிறீர்கள்? தமிழர்கள் அறிவு உள்ளவர்கள். ஆனால் தைரியம் இல்லாதவர்கள். எனவே புதிய தமிழர்களை உருவாக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
கருத்துக்களேதுமில்லை