சர்வகட்சி அரசாங்கத்துக்கு தேசிய சபை தீர்வல்ல – குணதாச அமரசேகர
இலங்கையில் அண்மையில் அமைக்கப்பட்ட தேசிய சபை, சர்வகட்சி அரசாங்கத்தை நோக்கமாக கொண்டு அமைக்கப்படவில்லை என தேசிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
அனைவரினதும் கோரிக்கையாக இருக்கும் சர்வகட்சி அரசாங்கத்துக்கு தேசிய சபை ஒரு தீர்வல்ல எனவும் கட்சி தலைவர்களுக்கு இன்று அனுப்பிய கடிதத்தில் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒரு நிலையான திட்டத்தை முன்வைக்க வேண்டுமெனவும் தேர்தலை நடத்துவதற்கான ஒரு திகதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமெனவும் தேசிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு மூல காரணமான பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசாங்கம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நாட்டின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச எதிர்ப்பு போராட்டம்
மேலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் எனவும் அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சபையை தவிர்த்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க தேவையான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை