பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நாடாக மாறியுள்ள இலங்கை – கடுமையாக சாடிய சந்திரசேகரன்!
இலங்கை பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் எமது நாடு என்பது கடன் வாங்கி பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நாடு அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் ரணில், ராஜபக்ச போன்ற அரசியல்வாதிகள் இன்று நாட்டினை இவ்வாறான நிலைமைக்கு தள்ளி இருக்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணி யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இத தொடாபில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் முழு நாட்டினையே காவு கொடுத்தவர்களால் இன்று மக்கள் பசியாலும், பட்னியாலும் வாடுகிறார்கள்.
அத்துடன் பாடசாலை மாணவர்கள் பசியால் மயங்கி விழுங்கின்ற நிலைமை காணப்படுகிறது. எரிபொருள் வரிசையில் 20க்கும் மேற்பட்டோர் இறந்துபோன சம்பவங்களும் உள்ளன.
ராஜபக்சாக்களை பாதுகாக்க வந்தவரே ரணில்
ஆகவே இவ்வாறான சம்பவங்களை நல் வழியில் முன்னெடுப்பேன் என கூறிக்கொண்டு வந்த ரணில் விக்ரமசிங்க ராஜபக்சாக்களை பாதுகாக்க வந்தவரே தவிர வேறு எதையும் செய்ய முடியாத நபராகவே மாறியுள்ளார்.
தற்போது அனைவராலும் பேசப்படுகின்ற பொருளாக IMF மூலமாக 2.9 பில்லியன் டொலர் கிடைக்க இருக்கின்றது. அதன் பின்னர் நாட்டு பிரச்சனைகளைத் தீர்ப்போம் எனக் கூறுகிறார்கள்.
வெட்கம் இல்லாத அரசியல்வாதிகள், கடன் வாங்கி நாட்டினை நாசமாக்கிய வரலாறு இருக்கின்றது. எமது நாடு என்பது கடன் வாங்கி பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நாடு அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
ரணில், ராஜபக்ச போன்ற அரசியல்வாதிகள் இன்று நாட்டினை இவ்வாறான நிலைமைக்கு தள்ளி இருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளுக்கு இறுதியான தீர்வாக புதிய மக்கள் ஆணைக்கான சந்தர்ப்பத்தைக் கொடு, தேர்தலை நடத்து, மக்களால் தெரிவு செய்கின்ற மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஒரு புதிய அரசாங்கத்தினை அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஜெ.ஆர். ஜெயவர்த்தனவின் வழியை பின்பற்றும் ரணில்
இதுவே மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இதுவே மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடும் ஆகும். IMF, உலக வங்கி போன்ற நிறுவனங்கள் மக்களின் புதிய ஆணையினை பெற்றுக்கொள்கின்ற பட்சத்திலே நாங்கள் உங்களுக்கு கடன் கொடுப்பதை பற்றி பரிசீலிக்க முடியும் என்று கூறுகிறது.
ஆனால் தனது மாமனாரான ஜெ.ஆர். ஜெயவர்த்தனவின் விளையாட்டினையே இன்று ரணில் விளையாடி வருகின்றார். கட்சிகளை உடைப்பது, கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, போராடுகின்றவர்களை அடக்கி ஒடுக்குவது, போராட்டங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டு வருவது போன்றனவாகும்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார சுமையினை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது இருக்கின்றது. இந்த சுமையினை மேலும் மேலும் மக்கள் மீது திணிக்கின்ற நபராக ராஜபக்சாக்களுடைய கைக்கூலியாக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க மாறி இருக்கிறார்.
தற்போது இளைஞர்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் என்பது மக்களுக்கான போராட்டம். ஆனால் மக்களின் தலையின் மேல் இடியினை போடுகின்ற நபராக ரணில் விக்ரமசிங்க மாறியிருக்கிறார்.
இது தவிர நாட்டின் முக்கிய வளங்களை விற்றுத் தீர்க்கின்ற, அரச துறையை முற்றாக செயலிழக்கச் செய்கின்ற நடவடிக்கைளை முன்னெடுக்கின்ற நபராகவும் மாறியுள்ளார்.
74 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்களால் நாட்டு மக்களுக்கு எந்தவிதமான விமோசனங்களும் கிடைக்கப்பெற்றதாக வரலாறு இல்லை. தாங்களும் தங்கள் குடும்பங்களும், சாகாக்களையும் மாத்திரம் பாதுகாத்துக்கொண்டதே வரலாறாக இருக்கின்றது.
ஆகவே இவர்களிடம் இருந்து மீள வேண்டும். மக்கள் இதுக்கு எதிராக போராட வேண்டும். இதற்கு மக்கள் விடுதலை முன்னணியினைச் சூழ அணிதிரள வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்” எனவும் தெரவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை