இந்திய லெஜெண்ட்ஸ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ; டில்ஷான் மீண்டும் தொடர் நாயகன்
இந்தியாவில் நடைபெற்ற ரோட் சேவ்டி உலகத் தொடர் இரண்டாவது அத்தியாயத்திலும் இந்திய லெஜெண்ட்ஸ் அணி சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது.
இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கு எதிராக ராய்பூர் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (01) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 33 ஓட்டங்களால் வெற்றிபெற்று இந்திய லெஜெண்ட்ஸ் 2 ஆவது தொடர்ச்சியான தடவையாக சம்பியனானது.
அதேவேளை, முதலாவது அத்தியாயத்தில் போன்றே இந்த அத்தியாயத்திலும் தொடர்நாயகன் விருதை இலங்கை லெஜெண்ட்ஸ் அணித் தலைவர் திலக்கரட்ன டில்ஷான் தனதாக்கிக்கொண்டார்.
நாமன் ஓஜா அபாரமாக துடுப்பெடுத்தாடி அதிரடியாக பெற்ற சதம், வினய் குமார் மற்றும் அபிமன்யு மிதுன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்திய லெஜெண்ட்ஸ் சம்பியனாவதற்கு பெரிதும் உதவின.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்திய லெஜெண்ட்ஸ், நாமன் ஓஜாவின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்டெக்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது.
அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கர் (0), சுரேஷ் ரெய்னா (4) ஆகிய இருவரும் ஆடுகளம் நுழைந்த வேகத்தோடு ஆட்டமிழந்தனர்.
எனினும் நாமன் ஓஜாவும் வினய் குமாரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 90 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய லெஜெண்ட்ஸ் அணிக்கு உற்சாகம் ஊட்டினர். வினய் குமார் 21 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து யுவ்ராஜ் சிங்குடன் 4ஆவது விக்கெட்டில் மேலும் 45 ஓட்டங்களை வினய் குமார் பகிர்ந்தார்.
யுவ்ராஜ் சிங் 19 ஓட்டங்களைப் பெற்றார். இர்பான் பத்தான் 11 ஓட்டங்களுடனும் அவரது சகோதரர் யூசுப் பத்தான் ஓட்டம் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.
நாமன் ஓஜா 71 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 108 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இலங்கை லெஜெண்ட்ஸ் பந்துவீச்சில் நுவன் குலசேகர 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இசுறு உதான 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜெண்ட்ஸ் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
கடந்த வருடத்தில் போன்றே இந்த வருடமும் லீக் சுற்றிலும் அரை இறுதிப் போட்டியிலும் திறமையாக விளையாடிய இலங்கை லெஜென்ட்ஸ் இறுதிப் போட்டியில் பிரகாசிக்கத் தவறியது.
டில்ஷான் முனவீர (8), சனத் ஜயசூரிய (5), திலக்கரட்ன டில்ஷான் (11), உப்புல் தரங்க (10), அசேல குணரட்ன (19), ஜீவன் மெண்டிஸ் (20) ஆகியயோர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழக்க, இலங்கை லெஜெண்ட்ஸ் 13ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான நிலையில் இருந்தது.
ஆனால், இஷான் ஜயரட்ன, மஹேல உடவத்த ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். எனினும் அவர்கள் இருவரும் 18ஆவது ஓவரில் மிதுனின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க இலங்கை லெஜெண்ட்ஸின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.
இஷான் ஜயரட்ன 22 பந்துகளை எதிர்கொண்டு தலா 4 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களையும் மஹேல உடவத்த 19 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சில் வினய் குமார் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அபிமன்யு மிதுன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ரோட் சேவ்டி கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 192 ஓட்டங்களைப் பெற்றதுடன் 5 விக்கெட்களைக் கைப்பற்றி, 5 பிடிகளையும் எடுத்த திலக்கரட்ன டில்ஷான் தொடர்நாயகனாகத் தெரிவானார்.
ஆட்டநாயகன் விருது நாமன் ஓஜாவுக்கு வழங்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை