மகளிர் ஆசிய கிண்ண இருபது – 20 கிரிக்கெட் : இலங்கையை வெற்றிகொண்டது இந்தியா

பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் 01 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமான மகளிர் ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கையை 41 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது.

ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த அபார அரைச் சதம், ஹேமலதா, பூஜா, தீப்தி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 4 ஓவர்களுக்குள் அதிரடி வீராங்கனைகளான ஸ்ம்ரிதி மந்தானா (6), ஷெஃபாலி வர்மா (10) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு இழக்க இந்தியா பெரும் சோதனையை எதிர்கொண்டது.(23 – 2 விக்.)

ஆனால்,  ஜெமிமா  ரொட்றிகஸ், அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஹார்மன்ப்ரீத்  கோர் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஜெமிமா, ரிச்சா கோஷ் (9), பூஜா வஸ்த்ரேக்கர் (1) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் களம் விட்டகன்றனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜெமிமா 53 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 73 ஓட்டங்களைப் பெற்றார். தயாளன் ஹேமலதா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் ஓஷதி ரணசிங்க 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சமரி அத்தபத்து 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சுகந்தி குமாரி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.2 ஓவர்களில் 109 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கை துடுப்பாட்டத்தில் மூவரைத் தவிர ஏனைய அனைவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர்.

அணித் தலைவி சமரி அத்தபத்து மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

ஹசினி பெரேரா (30), ஷர்ஷிதா சமரவிக்ரம (26), ஓஷாதி ரணசிங்க (11) ஆகிய மூவரே துடுப்பாட்டத்தில் ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.

இந்திய பந்துவீச்சில் தயாளன் ஹேமலதா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும பூஜா வஸ்த்ரேக்கர் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிகஸ்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.