மசகு எண்ணெய் இறக்குமதியில் பாரிய மோசடி.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்ததில் ஒரு கப்பலில் இருந்து மாத்திரம் 100 மில்லியன் டொலர்கள் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பாரிய பொதுப் பண மோசடியை அவர் இன்று கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது வெளிப்படுத்தினார்.

இந்த மோசடி திட்டத்தை தீட்டியவர்கள் கோரல் எனர்ஜி டிஎம்சிசி என்ற நிறுவனத்தின் மூலம் மசகு எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாகவும், எனினும் அந்த எரிபொருள் நிறுவனம், இதுவரைக்காலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருளை வழங்கியிருக்கவில்லை என்றும் ஜயசேகர குறிப்பிட்டார்.

இந்த நிறுவனம் 99,673 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய்யை ஒரு பீப்பாய் 51.2 அமெரிக்க டொலர்களுக்கு விநியோகிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எனினும் அந்த மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 82.09 டொலர் அதாவது 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பணம் மோசடியான முறையில் வசூலிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவியேற்ற பின்னரே புதிய நிறுவனமான கோரல் எனர்ஜி டிஎம்சிசி, பெற்றோலியக் கூட்டத்தாபனத்துக்கு மசகு எண்ணெய் வழங்க முன்வந்துள்ளது. இந்தநிலையில் மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சகம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளை குறித்த நிறுவத்திடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்யுமாறு அச்சுறுத்தியுள்ளதாகவும் ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக மசகு எண்ணெய்க்கான கேள்விப்பத்திரங்களை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மட்டுமே அழைக்க முடியும். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லை. இந்தநிலையில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இந்த பாரிய மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் ஆழமான நெருக்கடியில் நாடு இருக்கும் நேரத்தில் இந்த பொதுப் பணத்தை ஏமாற்றுவதை சாதாரணமாக கருத முடியாது.

இது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான குற்றம். எனவே, இந்த பாரிய மோசடியை செய்தவர்கள் மீது அரசாங்கம் சுயாதீன விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜயசேகர கோரியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.