மகிந்த தலைமையிலான மொட்டு கட்சியில் இணைந்தார் ரணில்….
அதிபர் ரணில் விக்ரமசிங்க மொட்டுக்கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது சுயாதீனமாக செயற்படும் சுதந்திரபேரவையின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உரையை வைத்துப் பார்க்கும் போது,ரணில் மொட்டு கட்சியில் இணைந்துள்ளமை உறுதிப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மக்களின் சுனாமி அலையால் ஏற்பட்ட மாற்றம்
முறைமை மாற்றத்தை (சிஸ்டம் சேஞ்ச்) கோரி நாட்டில் சுனாமி ஒன்று ஏற்பட்டது. இதனால் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகியதோடு, நாட்டைவிட்டும் வௌியேறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் பீரிஸ் தெரிவித்தார்.
எனினும், நாட்டு மக்கள் முறைமை மாற்றத்தைக் கோரியிருந்தாலும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மொட்டுக் கட்சியில் இணைந்துகொண்டது மாத்திரமே நாட்டில் நடந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை களுத்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, ரணில் தற்போது சரியான பாதையில் நடப்பதாகவும் முன்னர் அவர் வேறு பாதையில் சென்றாலும் தற்போது எமது வழிக்கு வந்துள்ளதாகவும் எனவே அவரது அரசை பொதுஜன பெரமுனவினர் காப்பாற்ற வேண்டுமெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை