தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா
இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற தீர்மானம் மிக்க 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
அத்துடன் ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடருக்கான 4 புள்ளிகளை இந்தியா பெற்றதுடன் தென் ஆபிரிக்காவுக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
தென் ஆபிரிக்காவை 27.1 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா, 19.1 ஓவர்களில் வெற்றி இலங்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 100 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 3 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
ஷப்மான் கில் 49 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா, மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 27.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஹென்ரிச் க்ளாசென் (34), மார்க்கோ ஜென்சென் (14) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வொஷிங்டன் சுந்தர் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷாபாஸ் அஹ்மத் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்துக்களேதுமில்லை