பிளவுபட்டது மகிந்த அணி – ரணிலுடனான சந்திப்பும் தோல்வி
நாளையதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் இன்று மாலை அதிபர் ரணில் தலைமையில் இடம்பெற்ற அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்ட போதிலும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அறியமுடிகின்றது.
22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் வரலாறு
அவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டதன் பின்னர் அரசியல் வரலாறு தொடர்பில் அதிபர் ரணில் நீண்ட விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அதிபர் ஜே.ஆரின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம், அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட விதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட விதம் தொடர்பில் அதிபர் நீண்ட விளக்கமளித்துள்ளார்.
எனினும், பொதுஜன பெரமுனவில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்கு இந்த அரசியலமைப்பு திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
அப்போது காமினி லொக்குகே இரட்டைக் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அதிபர், ‘இவ்வளவு காலம் இதைப் பற்றி பேசாமல் அமைதியாக இருந்தேன். இந்த இரட்டை குடியுரிமையை நான் முன்மொழியவில்லை. நான் கூட போடவில்லை. முன்னாள் அதிபர் கோட்டாபயவின் காலத்தில் இது மேற்கொள்ளப்பட்டது. அதுதான் எனக்கு வேண்டும்.’என்றார்
இரட்டைக் குடியுரிமை
பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த, 22 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என உத்தரவாதமளிக்குமாறு கோரினார் அதற்கு சிரித்துக்கொண்ட அதிபர், மகிந்தானந்த வந்து வெற்றிலை பாக்கு வைத்து கும்பிட்டாலும், குறித்த நேரம் முடியும் வரை நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டோம் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 22வது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இன்றைய கூட்டம் நிறைவடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
கருத்துக்களேதுமில்லை