ஓட்டோ சாரதிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அதிகரிக்கப்படுமென, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18) ஐ.ம.ச. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது நாட்டில் மாத்திரமல்லாது, வௌிநாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைகள் நிலவுவதால், போதிய எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதில் சிக்கல் நிலவுவதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதை தவிர்க்கும் பொருட்டு, தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்தும் ஒரு சில மாதங்களுக்கு முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
வெளிநாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு
எனினும், தொழில்சார் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தகவல்களை அந்தந்த பிரதேச செயலகங்கள் மூலம் கோரியுள்ளதாக தெரிவித்த அவர், காவல் நிலையங்கள் ஊடாக அவற்றை பதிவு செய்து, அது தொடர்பான தகவல்களை தேசிய எரிபொருள் அட்டை QR தரவுத் தொகுதியில் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 2 வாரங்களுக்குள், அவர்களுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இரு வாரங்களுக்கு ஒரு முறை என 3 தடவைகளில் ரூ. 20, ரூ. 40, ரூ. 40 பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அது தொடர்பான நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஓட்டோக்களுக்கு மேலதிக எரிபொருள்
தற்போது முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஒதுக்கீடு தமக்கு போதாதென, முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் கடந்த வாரம் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் மகஜரொன்றை கையளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை