ஆடை களையப்பட்ட அகதிகள்: ஐ.நா. அதிர்ச்சி
ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இற்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி எல்லை அருகே ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் குழந்தைகளும் இருந்தனர் என்பது மேலும் வேதனை தரும் விஷயம்.
மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து துருக்கி வரை செல்லும் அகதிகள் அங்கிருந்து கிரேக்க நாட்டின் மூலம் ஐரோப்பாவுக்குள் செல்கின்றனர். அகதிகள் சட்டவிரோதமாகவே இப்படிச் செல்கிறார்கள் என்றாலும், சர்வதேச அகதிகள் சட்டத்தின்படி அவர்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலும் அவர்கள் வெவ்வேறு நாடுகளின் அரசுகளால், சட்டப்படியும் சட்டத்துக்குப் புறம்பாகவும் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குத் தரகர்கள் மூலம் சட்டவிரோதமாகப் படகுகளில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.
இந்நிலையில், துருக்கியின் வடக்கு எல்லைக்கு அருகே குழந்தைகள் உள்ளிட்ட 92 அகதிகள் ஆடை களையப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். தங்கள் நாடுகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்கள், அடக்குமுறைகள், உள்நாட்டுப் போர், வறுமை போன்ற துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என உயிரைப் பணயம் வைத்து இப்படியான ஆபத்தான பயணங்களை மேற்கொள்பவர்கள்.
இவர்கள் எவ்ரோஸ் ஆற்றைக் கடந்து படகுகளில் வந்ததாக கிரேக்கப் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். முன்னதாக அவர்களைத் துருக்கி இராணுவ வேன்களில் அழைத்துவரப்பட்டு அந்தப் பகுதியில் இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் சிலருக்கு உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்திருக்கிறது. நிர்வாணமாக அவர்கள் நிற்கும் படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தச் சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் தருவதாகக் கூறியிருக்கும் அகதிகளுக்கான ஐநா ஆணையம் (யு.என்.ஹெச்.சி.ஆர்), இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கிரேக்கம், துருக்கி ஆகிய இரு நாடுகளிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில், துருக்கியும் கிரேக்கமும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக்கொள்கின்றன. ஆனால், அகதிகளிடம் மனித உரிமை மீறல்களில் தாங்கள் ஈடுபட்டதாக ஒரு சம்பவம்கூட இல்லை என்று துருக்கி கூறுகிறது.
அகதிகள் பிரச்சினையைக் கையாளும் வகையில், 2016-ல் துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதன்படி, அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு துருக்கிக்கு வழங்கப்பட்டது. அதற்காக அந்நாட்டுக்கு பில்லியன் கணக்கில் யூரோக்கள் வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை நினைவூட்டியிருக்கும் கிரேக்கம், அதைப் பின்பற்றி நடக்குமாறு துருக்கியிடம் வலியுறுத்தியிருக்கிறது.
கருத்துக்களேதுமில்லை