வெளிநாடுகளிலிருந்து கடனை பெறாது முதலீட்டினை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும் – ஜனாதிபதி

வெளிநாடுகளிலிருந்து கடனை பெறாது முதலீட்டினை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் கட்டிடம் ஒன்றினை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

முதலீடுகளின் வாயிலாக இலாபத்தினை ஈட்டுவதே நாட்டிற்கு நன்மையை பெற்றுத்தரும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட வர்த்தகத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும் நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தளம்பல் அடைந்துள்ள பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். முதலீடொன்றினை மேற்கொள்ளும் போது நாங்கள் அரச நிறுவனம் ஒன்றின் வாயிலாக பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த நிலைமையானது காலத்தினை வீண் விரயம் செய்யும் நடவடிக்கை என்பதால் முதலீட்டுக்கு என பிரத்தியேக அலுவலகம் ஒன்றினை அமைக்க வேண்டும்.

முதலீட்டாளர் ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்குள் அவரின் நோக்கத்தை அடைவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இரண்டாவதாக மனித வளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதனை முறையாக மேற்கொண்டால் நான்கு வருடங்களுக்கான வரிச்சலுகை காலத்தினை வழங்க வேண்டிய தேவையில்லை.

இலங்கையர்கள் கால்பந்து போன்று செயற்பட வேண்டும். கீழே அடித்தால் மீண்டும் மேலெழும் பந்தினை போன்று செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.