இலங்கையில் சுற்றுலா வலயங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கையில் சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வலயங்கள் இன்மையே சுற்றுலாத்துறையை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1980ஆம் ஆண்டு பெந்தோட்டைக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலா வலயங்கள் எதுவும் பிரகடனப்படுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறுகம் குடா போன்ற அனைத்து சுற்றுலாப் பிரதேசங்களும் இரவு 10 மணிக்குப் பின்னர் மூடப்படுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, குறிப்பிட்ட சுற்றுலா வலயங்களை விரைவாக நிறுவுவது இன்றியமையாதது என குறிப்பிட்ட அமைச்சர் சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டதும், இதன் மூலம் அதிக திறன் மேம்பாடு அடைய முடியும் என்றார்.

ஹப்புத்தளை, மிரிஸ்ஸ, எல்ல போன்ற இடங்களில் சுற்றுலா வலயங்களை அமைக்க அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போதே சுற்றுலாத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் சுற்றுலா இலக்குகளை அடைவதற்கு திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தின் ஊடாக செயற்படுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.