விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க திட்டம்!!
இலங்கையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள முன்னாள் போராளிகள் குறித்து மக்கள் தெளிவுடன் செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
குறித்த தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் புனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம்
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெறுமனே மக்களிடம் வாக்கு பெறுவதற்கான ஒரு அமைப்பு அல்ல.
எங்களுடைய மக்கள் சில விடயங்களை புரிந்துகொள்ள மாட்டார்கள். நாங்கள் இந்தக் கோணங்களில் பேசினால் விளங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் ஒருசில விடயங்களை புரிய வைக்க நாங்கள் முனைந்திருக்கிறோம்.
அந்தந்த தருணங்களில் சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லித்தான் வந்திருக்கின்றோம். காலப்போக்கில் அவ்வாறு சொல்லப்பட்டவை சரியென நிரூபிக்கப்பட்டும் இருக்கின்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஏனைய அனைத்து தரப்பினரும் தமிழ் மக்களினுடைய அரசியலை ஒற்றை ஆட்சிக்குள்ளே – 13ஆம் திருத்தம் அல்லது ஒருமித்த நாடு என்ற திட்டத்துக்குள் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தை முடக்குவதற்கு செயற்படுகின்றார்கள்.
இன்னும் ஒரு தரப்பு இன்று தலை தூக்கப் பார்க்கின்றது. எங்களுக்காக உயிர்த்தியாகம் செய்த, வாழ்க்கையை தியாகம் செய்த போராளிகள் இருக்கின்றார்கள்.
எங்களை பொறுத்த வரையிலே அந்தப் போராளிகள் சாதாரண மக்களையும் விட உயர்ந்தவர்கள்.
ஆனால், அந்த புனிதமான தரப்பின் பெயரை பயன்படுத்தி இன்று ஒரு சிலர் அந்தப் போராட்டத்தினுடைய அடிப்படையினையே மாற்றி அமைப்பதற்கு வேலை செய்கின்றார்கள்.
விடுதலைப் போராட்டத்தினுடையஅடிப்படை நோக்கத்தையே மாற்றுவதற்கு வேலை செய்கின்றவர்கள் உண்மையில் போராளிகள் அல்ல” – என்றார்
கருத்துக்களேதுமில்லை