நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க நாம் தயார்..! திட்டங்கள் கைவசம் என்கிறது ஜே.வி.பி
இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு தமது ஆட்சியை நாட்டில் நிலைநாட்ட ஆயத்தமாக உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து வெளிவர தேவையான திட்டம் தமது கட்சியிடம் மாத்திரம் இருப்பதாக பண்டாரகமாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மக்கள் ஆதரவு இல்லை.
கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களின் போது மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவால் நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் அவரது ஆட்சி முடிவுக்கு வரும் என்ற காரணத்தினால் அதிபர் தேர்தலை ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளார். தமது முன்னோர்கள் கடந்த காலங்களில் முன்னெடுத்த திட்டங்களை தற்போது அவரும் முன்னெடுக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் இலங்கையின் நிலை குறித்து பல கருத்துக்களை முன்வைத்தாலும், நாட்டை கட்டியெழுப்ப தேவையான எந்தவொரு திட்டமும் அவரிடம் இல்லை. அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட எந்தவொரு திட்டத்தையும் அவர் எதிர்க்கவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே மக்கள் விருப்பத்தை தெரிந்து கொள்ள முடியும். மக்களின் ஆதரவு மக்கள் விடுதலை முன்னணிக்கு அதிக அளவில் வழங்கப்படும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை