சமூகம் ஒன்றிணைந்தால் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க முடியும்-பதில் பொறுப்பதிகாரி டார்வின்.

சமூகம் ஒன்றிணைந்தால் தற்போது பெருகிவரும் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க முடியும் என சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி டார்வின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மட்டுவில் -சந்திரபுரம் அம்பாள் சனசமூக நிலையத்தின் 38வது ஆண்டு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
ஒரு சமூகத்தின் வளர்ச்சி கல்வி மற்றும் ஒழுக்கத்தில் தங்கியுள்ளது.
அது சீராக இருந்தால் அந்த சமூகம் வளர்ச்சிப் பாதை நோக்கிப் பயணிக்கும்.ஓர் குடும்பம் பிள்ளைகளை சிறந்த பிரஜைகளாக வளர்த்தாலும் சமூகத்தால் அவர்கள் சீர்கெட்டுப் போகக்கூடிய நிலை காணப்படுகிறது.ஒவ்வொரு கிராமத்திலும் சனசமூக நிலையம்,விளையாட்டுக் கழகம் மற்றும் ஆலயச் செயற்பாடுகள் சிறப்பாக நடக்குமானால் இளைஞர்கள் வழிதவறிச் செல்வதனைத் தடுக்க முடியும். ஒரு மனிதனின்
தவறுகளை அவரின் குடும்பமோ அல்லது பாடசாலையோ தட்டிக்கேட்காத பட்சத்தில் அந்த மனிதன் காலப்போக்கில் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறி சமூகம் ஊடாக பொலிஸ் நிலையம் வரக்கூடிய நிலை காணப்படுகிறது.
ஒருவரின் தவறுகளை அவரின் குடும்பம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் சமூகம் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் தவறுகளை தட்டிக்கேட்டு சமூகத்தை பாதுகாக்க முடியும்.கடந்த காலங்களை விட இன்று வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாகக் காணப்படுகிறது.சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல கிராமங்களிலும் போதைப்பொருள் பாவனை காணப்படுகிறது.
இந்த போதைப்பொருள் கலாசாரத்தில் இருந்து எமது இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு.இளைஞர்களை தவறான பாதையில் இருந்து மீட்டெடுக்க சமூக அக்கறை கொண்ட தலைவர்கள் முன்வர வேண்டும்.சனசமூக நிலையம் உள்ளிட்ட கிராம மட்ட பொது அமைப்புக்களின் செயற்பாடுகள் வினைத்திறனாக காணப்படுமானால் இளைஞர்களை நல்வழிப்படுத்தி சிறந்த பிரஜைகளை உருவாக்க முடியும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.