ஏழு மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த இளம் தாய்
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
தாய்ப்பால் இல்லாமல் தவித்த குழந்தைகளுக்கு ஒரு அன்னையாக மாறி, அவர் செய்த உன்னத செயலை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தனக்கு இன்னும் வாய்ப்பு கிடைத்தால் இந்த சேவையை தொடர்ந்து செய்வேன் என்றும் அந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பொறியியல் பட்டதாரி
கோவை மாவட்டம் கனியூரைச் சேர்ந்தவர் சிந்து மோனிகா (29). பொறியியல் பட்டதாரியான இவருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வந்த சிந்துவுக்கு, எத்தனையோ குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை என்ற உண்மை தெரிந்தது. இதையடுத்து, இதுபோல உள்ள குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என நினைத்த சிந்து மோனிகா, தனது தாய்ப்பாலை சேகரித்து கொடுப்பது என முடிவு செய்தார்.
அதன்படி, தினமும் தனது தாய்ப்பாலை சேகரித்து அதை தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாக சிந்து கொடுத்து வந்தார். தனது மகன் பிறந்த 100-வது நாளில் இருந்து அவர் இந்த சேவையை செய்து வருகிறார். இவ்வாறு கடந்த 7 மாதங்களில் மட்டும் 50,000 மி.லி. தாய்ப்பாலை சேகரித்து சுமார் 1,400 பச்சிளம் குழந்தைகளின் பசியை சிந்து போக்கியுள்ளார்.
தாய்ப்பால் தானம்
சிந்துவின் இந்த சேவை குறித்து கேள்விப்பட்ட ‘ஏசியா புக் ஒப் ரெக்கோர்ட்’ (Asia Book Of Record) நிறுவனம், அவரது செயலை சாதனையாக அங்கீகரித்து தனது புத்தகத்தில் சிந்து மோனிகாவின் பெயரை இடம்பெறச் செய்துள்ளது.
இதுகுறித்து சிந்து கூறுகையில், “தாய்ப்பால் தானம் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக என்னை உணரச் செய்கிறது. வாய்ப்பு கிடைத்தால் இன்னும் இந்த சேவையை தொடர்ந்து செய்வேன்” என்றார்.
கருத்துக்களேதுமில்லை