தமிழக மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் – நளினி நெகிழ்ச்சி!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வௌ்ளிக்கிழமை (11) தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் சனிக்கிழமை (12) விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து நளினியும் வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பரோலில் இருந்து நளினியை காவல்துறையினர் தகுந்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலை தொடர்பான நடைமுறைகளை முடித்த பிறகு, அவரை விடுதலை செய்தனர்.
இதேபோல் முருகன், சாந்தன் ஆகியோரும் நடைமுறைகள் முடிந்து விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் நளினி. “கடந்த 32 ஆண்டுகளாக எங்களை மறக்காமல் உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி. 32 ஆண்டுகள் சிறையில் இருந்தது கஷ்டமாகத் தான் இருந்தது.
32 ஆண்டுகள் போய்விட்டன. இதன்பிறகு என்ன சந்தோஷம் உள்ளது. ஆனாலும், விடுதலைக்கு உதவிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
எனது மகள் இங்குவர இப்போதைக்கு வாய்ப்பில்லை. நானும் எனது கணவரும் லண்டன் சென்று அவளைச் சந்திப்போம். விடுதலையை சிலர் விமர்சித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. இது சகஜமான ஒன்றுதான். எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்க முடியாது. மற்றவர்களின் கருத்தை ஏற்க வேண்டும்; உள்வாங்க வேண்டும்.
ராஜீவ் படுகொலையில் காவல்துறையை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், ஆளுநர் எனக்கு விடுதலை தர முடியும் என்பதை நான் எப்படி எதிர்பார்க்க முடியும். 32 வருடங்கள் சிறையில் இருந்துவிட்டோம். அவர்களுக்கு இது திருப்தியாக இல்லையா என்று தெரியவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை