ஏர் இந்தியாவுக்கு 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்த அமெரிக்கா
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவரத்து துறை 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
விமான டிக்கெட்களை ரத்து செய்த மற்றும் பயணங்களில் மாற்றம் செய்த பயணிகளுக்கு தொகையை திருப்பி தருவதில் டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் அதிக காலம் எடுத்துகொண்டதாக கூறப்படுகிறது.
இது பெரும்பாலும் கொரோனா பெருந்தொற்றின் போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
1.4 மில்லியன் டாலர் அபராதம்
இந்தநிலையில், பயணிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டிய, ரீஃபண்ட் தொகை (refund) 121.5 மில்லியன் டாலர் செலுத்தவும், கால தாமதத்திற்கான அபராதமாக 1.4 மில்லியன் டாலர் செலுத்தவும் அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மொத்தம் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்ட 6 விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க போக்குவரத்துத் துறை திங்களன்று தெரிவித்தது.
ஏர் இந்தியாவின் “கோரிக்கையின் பேரில் பணத்தைத் திரும்பப்பெறுதல்” என்ற கொள்கையின் படி விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தாலோ அல்லது பயணத்தில் மாற்றம் செய்தாலோ சட்டப்பூர்வமாக பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
1900க்கும் மேற்பட்ட புகார்கள்
அதிகாரப்பூர்வ விசாரணையின்படி, பணம் திரும்ப செலுத்துதல் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 1900க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதை செயல்படுத்த ஏர் இந்தியா 100 நாட்களுக்கு மேல் எடுத்தது. எனினும் ஏர் இந்தியா இதுதொடர்பாக முறையான தகவல்களை தரவில்லை.
புகார்களை பதிவுசெய்தது தொடர்பாக உரிய தகவல் இல்லை. இதனால் பயணிகள் பாதிப்படைந்தனர் என்று அமெரிக்க போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அதேவேளை ஏர் இந்தியாவைத் தவிர Frontier, TAP Portugal, Aero Mexico, EI AI மற்றும் Avianca ஆகிய விமான நிறுவனங்களுக்கும் அமெரிக்கா அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை