வடகிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! வடமேற்கு திசையில் நகரும் தாழமுக்கம்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு காலநிலை தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்கள் எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்கள தெரிவித்துள்ளது.
இதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேரிக்கை விடுத்துள்ளது.
தாழமுக்கம்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது வட அகலாங்கு11.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 540 கிலோ மீற்றர்தூரத்தில் மையம்கொண்டுள்ளது.
அது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அடுத்த 24 மணித்தியாலங்களில் அது பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிளாலர்களும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இடியுடன் கூடிய மழை
மேலும் திணைக்கள அறிக்கையில் “கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டைவரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
கடல் கொந்தளிப்பு
காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலைவரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை