தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும்! – தலதா அத்துக்கோரள வலியுறுத்து

நாட்டின் நெருக்கடியைக் கருத்தில்கொண்டு குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து எவ்வித யோசனைகளுமின்றி இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்தைகளையுடைய தாய்மாரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.

மந்தபோசனையால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்று அதிகளவு பேசப்படுகின்றது. அவ்வாறு இருக்கும்போது தாயின் உடற்சூடு தேவைப்படும் இரண்டு வயது குழந்தையை விட்டுவிட்டு தாய்மாரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டால், மந்தபோசனைப் பிரச்சினைக்கு மேலாக உளநல பாதிப்பை உடைய சமூகமே உருவாகும்.

 

 

தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும்! - தலதா அத்துக்கோரள வலியுறுத்து | Mothers Should Be Stopped From Being Sent Abroad

சிறுவர்களே நாட்டின் எதிர்காலம். சிறுவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது சிறந்ததல்ல. சிறுவர்கள் தொடர்பிலான அமைச்சு எனக்கு கையளிக்கப்பட்டபோது நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளைப் பார்க்கும் போது, அந்தச் சமூகப் பிரச்சினைக்குக் காரணமான சிறுவர்களின் பெற்றோர் வெளிநாடுகளில் வாழ்ந்த தரப்பினராக இருப்பர். எனவே, அவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. சிறுவர்களின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

அடுத்ததாக ஓமான் விவகாரம். வெளிநாட்டு வேலைவாயப்புப் பணியகம் என்பது தற்போது புதிதாகச் செய்திகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது. ஓமான் விடயம் என்பது புதிய விடயமல்ல. தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த விடயமே இது. டுபாய் நாட்டுக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கிருந்து ஓமானுக்கும் பயணிக்க முடியும்.

ஓமானுக்கு வேலைவாய்ப்பு விசா இன்றி வருவார்களாயின் ஓமான் அரசால் உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்து உயர்ஸ்தானிகரின் தலையீட்டுடன் வேலைவாய்ப்பு விசாவைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓமான் என்பது எம்மை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான நாடாகும். சிங்களவர்களுக்கு உரிமையான ஹோட்டல்கள் அங்கு காணப்படுகின்றன. ஆடைத்தொழிற்சாலை பணிக்கே அங்கு அதிகம் செல்கின்றனர்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஓமான் என்பது வித்தியசாமான நாடாகும். இலங்கையர்களை அவர்கள் மிகவும் கௌரவத்துடன் நடத்துகின்றனர். எனவே, நாட்டில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள ஓமான் விவகாரம் என்பது அதிகாரிகளின் கீழ்த்தமரான செயற்பாடுகள் காரணமாகவே ஏற்பட்டுள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.