மறைந்த தவிசாளரின் ஞாபகார்த்தமாக களுதாவளை பொது மயானத்தில் அஞ்சலி மண்டபம்…
சுமன்)
கடந்த 01ம் திகதி மரணமடைந்த மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக களுதாவளை பொது மயானத்தில் அஞ்சலி மண்டபம் அமைப்பதற்காக பிரதேச சபை உறுப்பினர் இ.வேணுராஜ் அவர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது. பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் மறைவின் பின்னர் இடம்பெற்ற சபை அமர்வாதலால் இவ்வமர்வானது பிரதித் தவிசாளர் திருமதி க.ரஞ்சினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதேசசபை உறுப்பினர்களால் தவிசாளரின் மறைவுக்கு அனுதாபங்கள் தெரிவித்து இரங்கல் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இதேவேளை பிரதேசசபை உறுப்பினரான இ.வேணுராஜ் அவர்களினால் தவிசாளரின் மறைவுக்கு அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டதுடன், அன்னாரின் ஞாபகார்த்தமாக களுதாவளை பொது மயானத்தில் அஞ்சலி மண்டபம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற விசேட பிரேரணையொன்றும் முன்வைக்கப்பட்டது.
இப்பிரேரணையானது அனைத்து சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை