இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் பொருளாதார ஆதரவு,எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் இல்லை என ஜெய்சங்கர் தெரிவிப்பு!!
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது, அந்த நாட்டுக்கு, இந்தியா வழங்கிய பொருளாதார ஆதரவு, முழு இலங்கை நாட்டிற்கும் உரியது அன்றி எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று ராஜ்சபாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இலங்கை தேசத்திற்கான ஆதரவில், தமிழ் சமூகத்தையும் உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் இந்தியா ஆதரவளிக்கிறது. எனவே ஆதரவு வழங்குவதில் எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் எடுக்கப்படவில்லை.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை என்றால், இந்தியா தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக அமைந்துவிடும்.
மேலும் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டிற்கு இணங்கவே ஜெனிவாவில் சிறிலங்கா தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வரைவுத் தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறான நிலையில், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கையொப்பமிடப்பட்ட 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் நிலை, தொடர்ந்தும் மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும்.
அதேவேளை, இலங்கைக்கு, இந்திய அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நியாயப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை