ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கும் ரணில்! – ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கின்றார்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பழுத்த அரசியல்வாதியாவார். ஆனால், மக்கள் மத்தியில் அவரது இராஜதந்திரங்கள் பெரிதாக விளங்குவதில்லை. இதனால்தான் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது ஐக்கிய தேசியக் கட்சி பூச்சிய நிலைக்குச் சென்றது. அதனோடு ரணிலின் அரசியல் சரித்திரம் பூச்சியமாகிவிட்டது என்றுதான் கணிசமானவர்கள் நினைத்தார்கள். ஆனால், பூச்சியத்தில் இருந்தும் இராச்சியத்தின் தலைவர் ஆகலாம் என்பதை ரணில் நிரூபித்து விட்டார்.

தற்போது அவர் தேசிய இனப்பிரச்சினையை 75 ஆவது சுதந்திர தினதுக்கு முன்பாகத் தீர்த்து விடப்போவது போல் பேசி வருகின்றார். ஆனால், அது சாத்தியமற்றது என்பதைத் தமிழ் தலைவர்கள் நன்கு அறிவார்கள்.

ரணில் விக்கிரமசிங்க 45 வருட கால நாடாளுமன்ற அனுபவசாலி என்பதுடன் பல்வகைப் பதவிகளை வகித்தவர். தற்போது சாத்தியமற்றது என்று நினைத்த ஜனாதிபதிப் பதவியையும் தனதாக்கியுள்ளார்.

இந்தநிலையில், இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பான பேச்சு என்ற ஒரு கல்லின் மூலமாக பல மாங்காய்களை விழுத்த அவர் நினைக்கின்றார். எது எப்படியாக இருந்தாலும் அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அந்தப் பேச்சில் கலந்துகொள்ள வேண்டியது அவசியமாகவுள்ளது.

அவ்வாறு கலந்துகொள்ளாது விட்டால், தான் நியாயமான அடிப்படையில் இனப்பிரச்சினையைத் தீர்க்க முற்பட்ட போதும் தமிழ்த் தலைமைகள் ஒத்துழைக்கவில்லை என்றும், அவர்கள் இனப்பிரச்சினைய அப்படியே வைத்துக் கொண்டு அரசியல் செய்ய விரும்புகின்றார்கள் என்றும் குற்றச்சாட்டை உருவாக்கி சர்வதேசத்துக்கு ஜனாதிபதி சொல்லுவார்.

இதனைத் தமிழ்த் தேசியத் தலைவர்கள் அறிவார்கள். எனவே, தமிழ்த் தலைவர்கள் அனைவரும் இந்தப் பேச்சில் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், காலத்தை நீடிக்க விடக்கூடாது என்பது கணிசமான தமிழ் மக்களின் நிலைப்பாடாகும்.

அது அவ்வாறு இருக்க, ஜனாதிபதி ரணில் பேச்சு என்ற தந்திரக்கல் மூலமாக விழுத்த நினைக்கும் மாங்காய்கள் எவை எனப் பார்ப்போம்.

சர்வதேசத்தின் பார்வையில், ஜனாதிபதி தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் சாதகமாகச் செயற்படுகின்றார் என்ற விம்பம் ரணிலுக்கு ஏற்படும். அதேவேளை, சர்வதேச மத்தியஸ்த பொறிமுறையில் இருந்து தப்பிக்ககொள்ள ஜனாதிபதி நினைக்கிறார். ஆனால், பேச்சின் அடுத்த கட்டத்திலாவது சர்வதேசத் தலையீடு அவசியமானதாகும். குறிப்பாக இந்தியாவின் தலையீட்டைத் தவிர்க்க முடியாது. அமரிக்கா, கனடா போன்ற நாடுகளது தலையீடுகளும் அவசியமானது.

சாதாரண தமிழ் மக்களின் பார்வையில், ரணில் இனப்பிரச்சினையைத் தீர்கக விரும்புகின்றார், அவர் ராஜபக்சக்களை விடப் பரவாயில்லை, இனவாதம் அற்றவர் அல்லது குறைந்தவர் என்ற எண்ணம் ஏற்படலாம்.

மொட்டுக் கட்சியினர் பார்வையில் தமக்கு ஏற்பட்ட அதிகார நெருக்கடியில் இருந்தும், நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்தும் மீள்வதற்கு இந்த நாடகத்தைக் குறித்த காலம் நடத்த வேண்டும், பின்னர் சிங்களவர்களின் காவலர்களாகக் காட்டி இதனைக் குழப்ப ரணில் வழிவகுப்பார் என்றும் கருத வாய்ப்புள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் பார்வையில் பேச்சைப் புறக்கணித்தால் தாம் தீர்வுக்கு எதிரானவர்கள் என்ற பெயரை ரணில் ஏற்படுத்தி விடுவார் என நினக்க இடமுண்டு. எனவே, தம்பக்கமாக அடிக்கப்பட்ட பேச்சு என்ற பந்தை கவனமாகக்கையாள வேண்டிய நிலைப்பாட்டில் தமிழ்த் தரப்பினர் உள்ளனர்.

ஜனாதிபதியின் பார்வையில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பாத சமஷ்டித் தீர்வை வழங்க முடியாது, அவர்களது கருத்தையும் உள்ளடக்கிய குறைந்த பட்சமான தீர்வையே தர முடியும் என்ற நிலையில் உள்ளார்.

மேலும் கிழக்கு முஸ்லிம் தலைவர்களையும், கூடவே சந்திரகாந்தன் (பிள்ளையான்), கிழக்குச் சிங்களத் தலைவர்கள் போன்றவர்களைப் பயன்படுத்தி வடக்கோடு கிழக்கை இணைக்கும் கோரிக்கையை நிராகரிக்க முடியும் என்ற நிலைப்பாடு ஜனாதிபதிக்கு உண்டு.

மேலும் ஐக்கிய தேசியத் கட்சியினர் பார்வையில் ரணில் எப்படியாவது, அவரது இப்படியான தந்திரோபாயங்கள் மூலமாக தமது கட்சிக்கு மீண்டும் செயற்கைச் சுவாசம் அளித்து உயிர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கின்றனர்.

மேலும், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஒற்றையாட்சி சிந்தனையானது ராஜபக்சக்களின் சிந்தனைத்தளத்துக்கு ஒப்பானது என்பதை வெளிக்காட்ட ஜனாதிபதி விரும்புகின்றார்.

இப்படியாக ஒரு கல்லில் பல மாங்காயகளை விழுத்த ஜனாதிபதி ரணில் நினைக்கின்றார்.

கடந்த 74 ஆண்டுகளாக சிங்களத் தலைவர்கள் கையாண்ட அபதந்திரங்கள் யாவும் நாட்டுக்கும் மக்களுக்கும் அந்தரநிலையையே ஏற்படுத்தியுள்ளது. அபதந்திரம் தனக்கந்திரம் என்பதை இந்த நாட்டை ஆட்சி செய்த சிங்களத் தலைவர்கள் விளங்காமல் இருப்பதுதான் விந்தையாகவுள்ளது.

அந்த அபதந்திரந்தான் இந்த நாட்டின் சமூக பொருளாதார அரசியல் அனைத்தையும் அதள பாதாளத்துக்குத் தள்ளியுள்ளது.

இந்த நாட்டில் மூன்று விடயங்கள் நாட்டை வெகுவாகப் பாதித்துள்ளன. பேரின மேலாதிக்க அடிப்படைவாதம், தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமை, ஊழல் மோசடிகள்.

இந்த விடயங்களுக்கு நிலையான நியாயமான தீர்வு காணப்படாதவரை இந்த நாட்டையும் மக்களையும் எந்தத் தலைவர்களாலும் மீட்க முடியாது. இவற்றைத் தீர்ப்பதற்கு தலைவர்களுக்கு இதயசுத்தி இருக்க வேண்டும், மாறாக இதய சொத்தியான தலைவர்களால் நாட்டை அழிக்கவே முடியும், ஆக்க முடியாது என்பதே கடந்த 74 வருடகால தரித்திரமான சரித்திரமாகும்.

அந்த தரித்திர சரித்திரத்தில் இருந்து விடுபட பேரின அடிப்படைவாதம் அனுமதிக்காது. அதனைக் கடக்க முடியாத தலைவர்களே இலங்கையை இதுவரை ஆட்சி செய்துள்ளார்கள்.

ஜனாதிபதி ரணிலுக்கு பேரினவாதத்தை கடக்கக்கூடிய ஆளுமை ஆற்றல் உண்டா? என்பதுதான் எமது கேள்வியாகும். மொட்டுக் கட்டுப்பாட்டில் ரணில் உள்ளவரை அது அவரால் முடியாது. மொட்டுக் கட்டுப்பாட்டை உடைப்பதாக இருந்தால் இரண்டரை வருட காலத்தின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த முடியும். அதற்கான வாய்ப்பு எதிர்வரும் 2023 மார்ச் மாதத்தில் உண்டு. பொது மக்களதும், எதிர்க்கட்சிகளதும் அழுத்தம் அதிகரித்தால் அது சாத்தியமாகும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.