ஐந்து பில்லியன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெல்லப்போவது மெஸ்ஸியின் மாயாஜாலமா எம்பாப்பேவின் மாயாஜாலமா
தொடர்ந்து 4 முறை பலோன் டோர் (ballon dor) விருது வென்று உலகின் அதிசிறந்த வீரராக கருதப்பட்ட ஒரு நட்சத்திரத்தின் ஆட்டத்தால் 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த தேசத்தின் கனவுகளோடு ஆர்ஜெண்டினா களம் கண்டது .
பிரேசிலில் நடந்த அந்த உலகக்கோப்பையில் போஸ்னியா அணியுடனான முதல் போட்டியில், 3 வீரர்களை கடந்து அந்த நட்சத்திரம் புகுத்திய கோல், ஆர்ஜெண்டினா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. அவர்தான் மெஸ்ஸி எனும் துருவ நட்சத்திரம்.
இரண்டாவது போட்டியில் ஈரானுடன் கடுமையாக போராடினாலும், 3வது போட்டியில் நைஜீரியா, சுவிட்சர்லாந்து உடனான 16 அணிகள் கொண்ட போட்டி என, மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் வெற்றி கண்ட ஆர்ஜெண்டினா, காலிறுதியில் பெல்ஜியத்தை கிரங்கடித்தது.
இதன் மூலம் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக ஆர்ஜெண்டினாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார் லியோனல் மெஸ்ஸி. பரபரப்பான அந்த அரையிறுதி போட்டியில் பெனால்டி சூட் அவுட் முறையில் நெதர்லாந்தை வென்றது ஆர்ஜெண்டினா.
ஆர்ஜெண்டினாவின் 28 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் அந்த நாளும் வந்தது. பிரேசிலை அதன் சொந்த மண்ணிலேயே பந்தாடிய ஜெர்மனியுடன் மோதிய ஆர்ஜெண்டினா, ஆட்டத்தை கூடுதல் நேரம் வரை எடுத்து சென்றது. அப்போது வந்த ஜெர்மனியின் மரியோ கோட்ஸே, ஆர்ஜெண்டினாவுக்கு சவாலாக மாறினார்.
113வது நிமிடத்தில் அவர் புகுத்திய கோல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை கனவை தகர்த்தது.
தனது ஒப்பற்ற திறமையால் ஆர்ஜெண்டினாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற மெஸ்ஸிக்கு அத்தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் வழங்கப்பட்டது.
உலகக்கோப்பையை வெல்வதையே வாழ்நாள் லட்சியமாய் கொண்டிருக்கும் மெஸ்ஸிக்கு, 2022 கால்பந்து உலககோப்பை தொடரில் அது சாத்தியமாக இன்னும் சில மணி நேரங்களே உள்ளன.
எல்லா பக்கத்தின் முடிவிலும், முற்றுப்புள்ளி என்பது எப்போதும் முடிவல்ல. அது அடுத்த பக்கத்தின் தொடக்கம் என்பதே நிதர்சனமான உண்மை. 18 வயதினில், இளம் பருவத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் கொடுத்து ஒரு அணியில் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அளவுக்கு, ஒருவரிடம் என்ன இருக்கிறது என பல கேள்விகள் ஒரு நாள் எழுந்தன.
அப்போது தான் 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பையும் வந்தது. தான் யார் என்பதை கால்பந்து உலகுக்கு நிரூபித்தார் அந்த இளம் நட்சத்திரம். எதிரணி வீரர்களை கதிகலங்க வைக்கும் dribbling திறன், துல்லியமாக கோல் புகுத்தும் யுக்தி என ஒரு நவீன கால்பந்து வீரருக்கான அத்தனை திறன்களும் அவரிடம் நிரம்பியிருந்தன. ஆம் அவர்தான் எம்பாப்பே.
ஆர்ஜெண்டினாவுக்கு எதிரான 16 அணிகள் கொண்ட போட்டியில் அவர் ஆடிய ஆட்டம், மெஸ்ஸியின் அணியை தொடரில் இருந்தே வெளியேற்றியது.
இறுதிப்போட்டியில் குரோஷியா அணிக்கு எதிராக சுமார் 25 அடி தூரத்தில் இருந்து அவர் புகுத்திய கோல், பிரான்ஸ் அணி கோப்பையை முத்தமிட வைத்தது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் புகுத்திய இளம் வீரர்கள் பட்டியலில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுடன் அவரது பெயரும் சேர்ந்தது.
2018-ல் பல கேள்விகளுக்கு மத்தியில் விடை கொடுத்த கிளியன் எம்பாப்பே, தற்போது அஸ்தமனமான பல சூரியன்களின் மறு உதயமாக உருவெடுத்து வருகிறார். காலம் காலமாய் போற்றும் நட்சத்திரங்களின் வரிசையில் வரும்காலம் நோக்கிய கனவோடு பிரான்ஸ் நாயகன் கிளியன் எம்பாப்பே காணப்படுகின்றார்.
இரு பக்கத்தின் பலமும் உச்சத்தை தொட்டிருக்க, இறுதிப் போட்டியில் உலகக் கோப்பையை தழுவப் போவது யார் என்ற கேள்வி கால்பந்து ரசிகர்களின் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், வெல்லப் போவது மெஸ்ஸியின் மாயாஜாலமா? எம்பாப்பேவின் மாயாஜாலமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துக்களேதுமில்லை