மறைமுகமான மத்தியஸ்தம் சொல்ஹெய்ம் முன்னெடுப்பு – ரணில், சஜித், சம்பந்தனுடன் சந்திப்பு

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் சர்வகட்சி கலந்துரையாடலுக்கான மறைமுக மத்தியஸ்தராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது நோர்வே சார்பில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றியிருந்தவர் எரிக் சொல்ஹெய்ம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் காலநிலை தொடர்பான தூதுவராக அவர் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 13ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய சர்வகட்சி கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார் சொல்ஹெய்ம். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் 16 ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனையும் அவர் சந்தித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

சர்வகட்சி கலந்துரையாடலுக்கான பின்னணி ஏற்பாடுகளைத் தொடர்வது பற்றியே இந்தப் பேச்சுக்களின்போது அதிகளவு அக்கறையை எரிக் சொல்ஹெய்ம் வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. மறைமுகமான மத்தியஸ்தராகவே அவரது இந்தச் சந்திப்புக்கள் அமைந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.