பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி தார்மீக பொறுப்பை நிறைவேற்றுங்கள் – ஜனாதிபதி
அரசாங்கத்தின் மீதுள்ள அனைத்துப் பொறுப்புக்களையும் கைவிட்டு, அடுத்த தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றும் பாரம்பரிய அரசியல் முறைகளை புறந்தள்ளிவிட்டு, நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையேற்றம் காரணமாக இன்று மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை மறந்துவிடவில்லை எனவும், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்து அடுத்த வருடத்தில் மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
நேற்று நுவரெலியா நகர மண்டபத்தில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு மாவட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அரசியல் பேதங்களை விடுத்து அனைவரரையும் கைகோர்க்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என தெரிவித்த ஜனாதிபதி அதிக வாழ்க்கைச் செலவினால் அவதியுறும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பையும் உறுதியளித்தார்.
மக்கள் இன்று ஒரு குழுவை அல்ல முழு அரசியல் அமைப்பையும் நிராகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை மீளக் கட்டியெழுப்புவதன் மூலமே மக்களின் நம்பிக்கையை மீளப் பெற முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை