தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சூழ்ச்சி – அநுரகுமார குற்றச்சாட்டு
ஏதேனும் குளறுபடிகளை செய்தேனும் தேர்தலை பிற்போடவே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதற்கான வாய்ப்புகள் இனியும் இருக்காது என தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, வெறும் 10 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க முடியாது என்றால், அடுத்த ஆண்டுக்காக 7,300 பில்லியன் ரூபாய்களை எவ்வாறு அரசாங்கம் தேடப்போகின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.
தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துவிட்டது. ஆனால் இன்னமும் தேர்தலை நடத்தாது நாள்களை கடத்திக்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு முடிந்துவிட்டது, இனியும் காலத்தை கடத்த முடியாத நிலையில் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் திகதியை அறிவிப்போம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் தான் ஜனவரி மாதம் 5ஆம்திகதி அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட தீர்மானித்துள்ளனர். ஜனவரி 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஏன் 5ஆம் திகதி கூட்ட வேண்டும்? 5ஆம் திகதி ஏதேனும் குளறுபடிகளை செய்து தேர்தலை பிற்போட முடியுமா என்றே இவர்கள் முயலுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இப்போது தேர்தலை நடத்த பணம் இல்லை என கூறுகின்றனர். அடுத்த ஆண்டுக்கான அரச செலவீனம் 7,300 பில்லியன் ரூபாயாகும். ஆனால் தேர்தலுக்கு வெறும் 10 பில்லியன் ரூபாய் செலவாகும். வெறும் 10 பில்லியன் ரூபாயை ஒதுக்க முடியாது என்றால் அடுத்த ஆண்டுக்காக 7,300 பில்லியன் ரூபாயை எவ்வாறு அரசாங்கம் தேடப்போகின்றது.
சட்ட ரீதியாக செய்ய வேண்டிய அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது என்றார்.
கருத்துக்களேதுமில்லை