முக்கியப் பிரமுகா்களை அச்சுறுத்தும் ‘பாஸ் ஸ்கேம்’
தமிழகத்தில் இணையம், சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. உதாரணமாக சென்னையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பாக 748 புகார்கள் வந்தன. இது 2021 ஆம் ஆண்டு 13,077 புகார்களாக அதிகரித்துள்ளன.
சைபர் குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 300 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், நிகழாண்டு டிசம்பர் 12-ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 1.11 லட்சம் புகார்கள் விசாரணை செய்யப்பட்டு ரூ.188 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது என குடிமக்கள் நிதி சைபர் மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வகை குற்றங்களால் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பொதுமக்களின் ரூ.2.50 லட்சம் கோடி அபகரிக்கப்பட்டுள்ளது.
30 வகையான சைபர் குற்றங்கள்: சைபர் குற்றங்களால் நாள் ஒன்றுக்கு மக்கள் பணம் ரூ.100 கோடி வரை பறிபோவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கணினிகள், கைப்பேசிகள் வாயிலாக நடைபெறும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. புது தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கணினிகள், அறிதிறன்பேசிகள் மூலம் பண மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பண மோசடி தொடர்பான குற்றங்கள் என இரு இலக்குகளை நோக்கி சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. இதுவரை 30 வகையான சைபர் குற்றங்கள் காவல் அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளன. காவல் அமைப்புகளால் கண்டறியப்படாத மற்றும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத சைபர் குற்றங்களும் உண்டு. பாஸ் ஸ்கேம்: தமிழகத்தில் அண்மை நாள்களாக அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை “பாஸ் ஸ்கேம்´ என்ற சைபர் குற்றம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உயர் அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி நடைபெறுவதால் இந்த மோசடிக்கு “பாஸ் ஸ்கேம்´ என்று பெயர்.
ஓர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அவர்களின் உயர் அதிகாரிகளிடமிருந்து கைப்பேசி மூலம் அழைப்பு வரும். அதில் பேசும் உயர் அதிகாரி, “நான் ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கிறேன். எனக்கு அவசரமாக பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 10 கூப்பன்களை வாங்கி அனுப்புங்கள். நான் பின்னர் பணம் கொடுத்து விடுகிறேன்´ என்று அவசரமாக தெரிவிப்பார். இதை குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்ஆப் மூலமாகவும் அனுப்ப வாய்ப்பு உள்ளது.
உடனே அந்த ஊழியர் தனக்கு பரிசு கூப்பன் வாங்கத் தெரியாது என்று சொன்னாலும், எதிர்முனையில் அதிகாரி போல பேசும் நபர், பரிசு கூப்பன் வாங்குவதற்குரிய இணைப்பை (லிங்க்) அவரது கைப்பேசிக்கு அனுப்புவார். உடனே அந்த ஊழியர், ரூ.1 லட்சத்துக்கு 10 கூப்பன்களை வாங்கி அனுப்பக்கூடும்.
ஆனால், தன்னிடம் பேசியது தன் உயர் அதிகாரி அல்ல என்பது அந்த ஊழியருக்குத் தெரியாது. அந்த அதிகாரி பயன்படுத்தும் கைப்பேசி எண்ணைப் போன்று மற்றொரு கைப்பேசி எண்ணைப் பயன்படுத்துவதாலும், வாட்ஸ்ஆப் முகப்பில் அந்த அதிகாரி வழக்கமாக பயன்படுத்தும் புகைப்படமே இருப்பதாலும் தொடக்கத்தில் சந்தேகம் ஏற்படாது.
உயர் அதிகாரி போல பேசும் மோசடி நபர், ஊழியர்களை யோசிக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து வாட்ஸ்ஆப் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாகவும் உத்தரவுகளை அனுப்புவதால், பரிசு கூப்பனை வாங்கி அனுப்பிய பின்னரே, சம்பந்தப்பட்ட அலுவலர் நிதானத்துக்கு வருவார். அதன்பிறகுதான் சம்பந்தப்பட்ட அதிகாரி, பரிசு கூப்பன் கேட்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை அலுவலர் உணர்வார்.
இதுதொடர்பாக விசாரிக்கும்போதுதான் தன்னிடம் மோசடி நடைபெற்றிருப்பது அந்த அலுவலருக்குத் தெரியவரும். ஆனால், அதற்குள் பரிசு கூப்பன் காலாவதியாகி இருக்கும். மேலும், பரிசு கூப்பனை பயன்படுத்தி பொருள்களை வாங்குவதற்கான முகவரியும் போலியாக இருக்கும்.
பழைய மோசடி; புதிய உத்தி: இந்த மோசடி புதிதல்ல என தமிழக சைபர் குற்றப் பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பே இது அறிமுகமாகிவிட்ட நிலையில், தற்போது புதிய உத்தியுடன் சைபர் குற்றவாளிகளால் கையாளப்படுவதாகக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 20 காவல் துறை அதிகாரிகள் உள்பட 80 முக்கியப் பிரமுகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக சைபர் குற்றப் பிரிவு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில் பல முக்கியப் பிரமுகர்கள் தங்களது பெயரில் மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தால், தேவையில்லாத தொந்தரவும், நெருக்கடியும் ஏற்படும் என நினைப்பதால் அதை மறைத்தும் வருவதாக தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எப்படி நடக்கிறது மோசடி?:
“சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியா´ அமைப்பின் தலைவரும் வழக்குரைஞருமான என்.கார்த்திகேயன் கூறியதாவது:
இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள், அரசு சார்புடைய உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்றவர்களின் விவரத்தையும், தகவலையும் அரசு இணையதள முகவரிகளில் இருந்து பெறுகின்றனர். அவர்களின் புகைப்படத்தை சம்பந்தப்பட்டவரின் வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்தும், சமூக ஊடகங்களில் இருந்தும் எடுக்கின்றனர்.
சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இந்த மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் தப்ப முடியும். அதேவேளையில் பரிசுக் கூப்பன் வழங்கும் நிறுவனங்கள், ஓர் ஊழியர், தன் உயர் அதிகாரியின் பெயரில் பரிசு கூப்பன் வாங்கி மூன்றாவது நபருக்கு அனுப்ப முற்படும்போது, அதற்கு குறுக்குச் சோதனை முறையைப் பின்பற்ற வேண்டும்.
இந்தக் குறுக்குச் சோதனையில் பரிசு கூப்பன் வாங்கும் ஊழியரிடமும், அதிகாரியிடமும் பரிசு கூப்பன் நிறுவனம், அவர்கள் ஆர்டர் செய்த பரிசு கூப்பன் குறித்த தகவலைப் பரிமாறி, சரியான நபருக்குத்தான் அது செல்கிறதா, அந்த பரிசு கூப்பன்களை அவர்கள்தான் வாங்கினார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் இந்த மோசடிக்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
மோசடி குறித்த புகார் வந்ததும், பரிசுக் கூப்பன் நிறுவனங்கள், அந்தக் கூப்பனை “டெலிவரி´ செய்வதை நிறுத்த வேண்டும், அதன் மதிப்பையும் உடனே செயல் இழக்கச் செய்ய வேண்டும். இதனால் மோசடி நடைபெறாமல் முற்றிலும் தடுக்க முடியும் என்றார் அவர்.
தமிழகத்தில் இந்த வகை குற்றத்தில் ஈடுபடுவோர் வட மாநிலங்களில் இருந்துகொண்டு கைவரிசையைக் காட்டுவதால், காவல் துறையினருக்கு அவர்களை கைது செய்வது சவாலான பணியாக உள்ளது. இந்த மோசடியில் முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டாலும், பணத்தை இழப்பவர்கள் சாதாரண கீழ்நிலை அதிகாரிகளும், ஊழியர்களும்தான். எனவே, தமிழக காவல் துறை இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே “பாஸ் ஸ்கேமில்´ பணத்தை இழந்தவர்களின் எதிர்பார்ப்பாகும்.
கருத்துக்களேதுமில்லை