ரன் அவுட் செயலை ஏற்க மறுத்த பயிற்சியாளர்!
பந்து வீசும் முன்பு கிரீஸை விட்டு வெளியேறிய பேட்டரை மறுமுனையில் ரன் அவுட் செய்யும் செயலை ஏற்க முடியாது என மெல்போர்ன் ஸ்டார் அணியின் பயிற்சியாளர் டேவிட் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
பந்துவீச்சாளர் முனையில் கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வது நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. ஆர். அஸ்வின், தீப்தி சர்மா ஆகியோர் அதுபோல ரன் அவுட் செய்து பலத்த சர்ச்சைகளுக்கு ஆளானார்கள். இந்நிலையில் பிபிஎல் போட்டியிலும் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் – மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான பிபிஎல் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்கள் எடுத்தது.
இந்த இன்னிங்ஸின் கடைசி ஓவரைப் பிரபல சுழற்பந்து வீச்சாளரும் கேப்டனுமான ஆடம் ஸாம்பா வீசினார். அப்போது 5 வது பந்தை வீச வந்தபோது மறுமுனையில் இருந்த பேட்டர் டாம் ரோஜர்ஸ், பந்தை வீசும் முன்பு கிரீஸை விட்டு வெளியேறியதைக் கண்டு உடனே ரன் அவுட் செய்தார் ஸாம்பா. ஆனால் அவர் செய்த தவறு, பந்து வீசும் முறையை முழுதாக முடித்துவிட்ட பிறகே ரன் அவுட் செய்தார். ஆனால் விதிமுறைகளின்படி பந்துவீசும் முறையை முடிக்கும் முன்பே ரன் அவுட் செய்து விட வேண்டும். அப்போது மறுமுனையில் உள்ள பேட்டர், கிரீஸை விட்டு வெளியேறியிருந்தால் ரன் அவுட் ஆவார். ஆனால் தவறான முறையில் ஸாம்பா ரன் அவுட் செய்ததால் 3 வது நடுவர் இதை ஏற்காமல் பேட்டருக்குச் சாதகமான தீர்ப்பை அளித்தார். வழக்கமாக இந்திய வீரர்கள் செய்யும் ஒரு செயலைத் தற்போது ஆஸி. வீரரும் செய்திருப்பது சர்ச்சையையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் ஸாம்பா தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் ஸாம்பாவின் செயலை ஏற்க முடியாது என மெல்போர்ன் ஸ்டார் அணியின் பயிற்சியாளர் டேவிட் ஹஸ்ஸி கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் தெரிவித்ததாவது:
3 வது நடுவரால் அவுட் என அறிவிக்கப்பட்டிருந்தால் எங்களுடைய முறையீட்டைத் திரும்பப் பெற்றிருப்போம். கிரிக்கெட் விளையாட இது சரியான வழியல்ல. ஸாம்பா செய்தது பேட்டருக்கான எச்சரிக்கை மட்டுமே என்றார்.
கருத்துக்களேதுமில்லை