ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும்- சந்திரிக்கா தெரிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும். இதுபற்றி, நான் அறியவில்லை, எனக்கு கூறவில்லையென மைத்திரி குறிப்பிடக் கூடாதென முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண் டாரநாயக்கவின் 124 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காலமுகத்திடலில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை (08) மலரஞ்சலி செலுத்தி,மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா,மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச் சர் ரஞ்சித் சியம்பலாபிடிய,மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமாரவெல்கம,பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க மேலும் குறிப்பிட்டதாவது,
ஆட்சியிலிருக்கும் போது தவறிழைக்காமல் சிறந்த முறையில் செயல்பட்டால், பதவி விலகிய பின்னரும் மக்களின் ஆதரவு கிடைக்கும். இல்லாவிட்டால் காலி முகத்திடலில் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்.மக்கள் மத்தியில் செல்வதற்கு எனக்கு எவ்வித அச்சமும் கிடையாது.
தற்போது,நாட்டு மக்கள் மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.அரசியல் செய்வதை விடுத்து மக்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளேன், இதில் எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட் சியின் மூத்த உறுப்பினரான அலவி மௌலானா, சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்கவின் பிறந்த தினத்தை விமர்சையாக கொண்டாடுவார். சுதந்திர கட்சியை ராஜபக்சாக்கள் பொறுப்பேற்றதன் பின்னர், ஓரிரு தடவைகள் இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது.ஆனால் சுதந்திர கட்சியின் பொறுப்பை மைத்திரிபால பொறுப்பேற்றதன் பின்னர் இந்த நிகழ்வு மறக்கடிக்கப்பட்டது.
எனது ஆட்சியில், தேசிய பாதுகாப்பை நான் பொறுப்பேற்றேன். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சிறு சந்தேகம் எழும்போது உடனே பாதுகாப்பு சபையை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். விடுதலை புலிகள், மத்திய வங்கியில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டபின்னரும் நாட்டின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடையவில்லை.24 மணி நேரத்துக்குள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன்.
அரச தலைவருக்கு நாட்டின் பாதுகாப்பு பொறுப்பாக்கப்பட்டுள்ளது, ஆகவே 2019 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும்.தாக்குதல் தொடர்பில் அவர்கள் எனக்கு குறிப்பிடவில்லை,நான் அறியவில்லை என பொறுப்பற்ற வகையில் அவர், குறிப்பிடக் கூடாது என்றார்.
கருத்துக்களேதுமில்லை