மத்திய வங்கிக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

இந்நாட்டின் வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில் கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதன் மூலம் வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகளைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் பெண் தொழில் முனைவோரை கௌரவப்படுத்தும் வகையில் நேற்று (11) மாலை கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற “பிரதிபா அபிஷேக 2022” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாகாண, தேசிய, சார்க் பிராந்தியம் மற்றும் சிறப்பு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இதன்போது தேசிய மட்டத்துக்கான விருதுகளையும் சிறப்பு விருதுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி கௌரவித்தார்.

நாடு என்ற வகையில் மிகவும் நெருக்கடியான சூழலை நாம் எதிர்கொண்டுள்ள போதும் அந்த சவால்களை முறியடித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு இவ்வருடத்தில் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கு மேலதிகமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து கடனுதவி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலாப நோக்கற்ற அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிலையான பொருளாதாரத்தில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி உலகத்துடன் போட்டியிடக் கூடியதான அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரதும் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, நேபாள தூதுவர் பஷு தேவ் மிஸ்ரா, பிரித்தானிய பதில் உயர்ஸ்தானிகர் லீசா வென்ஸ்டோல் மற்றும் மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவி அனோஜி டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.