எழுத்துமூல உறுதியுடன் முடிவிற்கு வந்த உண்ணாவிரத போராட்டம் (படங்கள்)
தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து இன்று (12.01.2023) கைவிடப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி (09.01.2022) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் இடம்பெறும் இடத்தில ஒன்று கூடியிருந்தனர்.
அத்துடன் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு சந்தியில் இலங்கை வங்கி கட்டடத்திற்கு அண்மையில் முன்னாள் போராளியும், மாவீரர்களின் சகோதரனுமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் நீராகாரம் எதுவுமின்றி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து முன்னெடுத்து வந்தார்.
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் தமக்கிடையிலான ஆசன பங்கீட்டு பிரச்சினைகளை கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்காக ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை இவர் ஆரம்பித்து முன்னெடுத்துவந்தார்.
இந்த நிலையில் இன்றையதினம் உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகை தந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், புளொட் அமைப்பின் உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான கந்தையா சிவநேசன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்த அங்கத்தவர் ஒருவர் ஆகியோர் எழுத்துமூல ஆவணத்தில் தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாக செற்படுவோம் என்றும், உண்ணாவிரதம் இருக்கும் நபரின் கோரிக்கையை வலுப்படுத்த ஒன்றிணைவோம் என்றும் உறுதிமொழியை வழங்கி கையொப்பமிட்ட பின்னர் உண்ணாவிரதம் மேற்கொண்ட நபருக்கு நீராகாரம் வழங்கி உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டிருந்த போதிலும் குறித்த உறுதி ஆவணத்தில் அவர் கையொப்பமிடவில்லை
அத்தோடு நேற்றையதினம் (11.01.2023) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் இந்த போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை