உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்ததன் மூலம் அரசியலமைப்பின் 104 ஆவது பிரிவை தெரிந்தே மீறியுள்ளார் எனவும், அமைச்சரவையால் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டதா இல்லையா என்பதை உடனடியாக அறியப்படுத்த வேண்டும் எனவும், இந்த தன்னிச்சையான கடிதத்தை அனுப்பிய செயலாளர் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தலை நடத்த வேண்டாம் என இவ்வாறான கடிதத்தை அனுப்புவது பாரிய தவறு என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இது குறித்த உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் காரசாரமான பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், பிரதமர் தற்போது பியன் நிலைக்கு ஆளாகிவிட்டார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், பிரதமர் பியன் போன்றவர் எனக் கூறியது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தந்தையே எனவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அன்று பிரேமதாஸ பியன் பதவி போன்ற பிரதமர் பதவியில் அமர்ந்து கொண்டு ஜனாதிபதி போன்று பணியாற்றினார் எனவும் தெரிவித்தார். பொரலுகொட சிங்கத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தாம் வருந்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை