சுதந்திர தினம் என்பது எதிர்காலத்திற்கான முதலீடு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

மிகுந்த இக்கட்டான பொருளாதார பின்னணியின் மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்வருடம் மருந்துகளுக்காக சுமார் 30-40 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தின் முறையான விவசாய கொள்கைக் காரணமாக இம்முறை மேலதிக நெல் அறுவடை கிடைத்திருப்பதாகவும் குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு தலா மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசி வீதம் 02 மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுதந்திர தினத்துக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஜனாதிபதி அது எதிர்காலத்துக்கான முதலீடு என தெரிவித்தார். மேலும் நூற்றாண்டு சுதந்திர விழாவை அடைவதற்குள்ள எதிர்வரும் 25 வருடங்களில் நாட்டுக்கு அவசியமான மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கு அவசியமான பல புதிய நிறுவனங்களையும் சட்டங்களையும் அறிமுகம் செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது எமக்கு இந்தியா மற்றும் சீனாவுடன் இணக்கப்பாட்டை எட்ட வேண்டி மட்டுமே உள்ளது. அது தொடர்பான பேச்சுக்களை நாம் முன்னெடுத்து வரும் நிலையில் அப்பேச்சு வார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக நான் இந்த சபைக்கு அறிவிக்க முடியும்.

நாம் எதிர்பார்க்கும் வருமானம் எமக்கு ஒரே தடவையில் கிடைக்க மாட்டாது. இவையனைத்தையும் ஒன்று சேர்த்து எமது வேலைதிட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதையே நாம் எதிர்பார்க்கின்றோம். சம்பளம் வழங்குவது எமது பிரதான செயற்பாடாகும். இண்டாவது இடத்தில் ஓய்வூதியம் வழங்குவது உள்ளது. சமுர்த்தி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

இவற்றுடன் மேலதிகமாக இன்னும் இரண்டு வேலைதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அதேநேரம் அதற்காகவும் நாம் நிதியை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

நாம் மருந்துக்காக நிதியைப் பெற்றுக் கொடுப்பதில்லையென தற்போது எம்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட வேண்டும். உண்மையில் சுகாதாரத்துறையில் ஒரு பிரச்சினை உள்ளது. அது கடந்த சில வருடங்களின் பற்றுச்சீட்டுகளுக்காக 50 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளமையாகும்.

எனினும் அவசியமான மருந்தை பெற்றுக்கொடுப்பதற்காக நாம் இவ்வருடம் 30-40 பில்லியனை ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறாயினும் சுகாதார அமைச்சும் திறைசேரியும் இணைந்து இதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். என்றாலும் இந்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சில காலம் எடுக்கும். எமது வைத்தியசாலைகளில் பற்றாகுறை நிலவுவதையோ அதேபோன்று மருந்துகள் இல்லாமல் மக்கள் உயிரிழப்பதையோ நாமும் விரும்பவில்லை. அதனால் அவ்வேலைத்திட்டத்திற்கு அவசியமான நிதியை நாம் ஒதுக்கியுள்ளோம்.

கடந்த வருடம் எமது நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இவ்வருடமும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுமென நாம் எதிர்பார்க்கின்றோம். எவ்வாறாயினும் நாம் விவசாயிகளுக்கு அவசியமான உரத்தை பெற்றுக்கொடுத்தோம். தற்போது எமக்கு மேலதிகமான அறுவடை கிடைத்துள்ளது.

கடந்த பெரும்போகமும் சிறு போகமும் வெற்றிபெற்றதன் காரணமாகவே எமக்கு இந்த மேலதிக நெல் கையிருப்புக் கிடைத்துள்ளது.தற்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு கிலோ நெல்லின் விலையை 100 ரூபாவாக பேணிவருவதாகும். அதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 05 பில்லியன் ரூபாய் போன்றதொரு தொகையே ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் மேலதிக கையிருப்பு விற்பனை செய்யப்பட்டது. எனினும் நாம் அதனை முன்னெடுக்க மாட்டோம்.

மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் 02 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் அரிசி பெற்றுக் கொடுப்பதற்கான வேலைதிட்டமொன்றை நாம் ஆரம்பிக்க இருக்கிறோம். அதனை விடவும் வழங்க முடியுமென்றால் நான் மகிழ்ச்சியடைவேன். நாம் 75வது சுதந்திரதின நிகழ்வைக் கொண்டாடவுள்ள இச்சந்தர்ப்பத்தில் மக்களை பசியில் வாடுவதற்கு அனுமதிக்க முடியாது. அதற்கு அவசியமான நிதியை நாம் பெற்றுக் கொடுப்போம்.

சுதந்திர தினத்துக்காக நிதியை விரயம் செய்வதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் நாம் மக்களுக்கு இதுபோன்ற நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதுபோலவே அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் 10 பில்லியன் வரை எமக்கு ஒதுக்க நேரிடும். இன்று சுதந்திரத்திற்குப் பின்னர் எமக்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. சுதந்திரம் அடைந்து 100 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் இந்நாட்டின் மறுசீரமைப்புக்கு அவசியமான பல நிறுவனங்களை உருவாக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

அதற்கமைய வரலாற்று தொடர்பிலான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். வரலாற்றை மறந்து விட்டோம் என்பதே எம்மீதான இப்போதுள்ள பாரிய குற்றச்சாட்டு ஆகும். அப்படியானால் நாம் அவ்வாறானதொரு நிறுவனத்தை ஆரம்பித்தேயாக வேண்டும்.

பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனமொன்றை நாம் நிறுவுவோம். இது தொடர்பில், உலக நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.மேலும், பெண்கள் மற்றும் பாலினத்திற்கான ஒரு நிறுவனத்தை நம் நாட்டில் முதன்முறையாக, உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றாம்.

மேலும், எமது அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க அரசாங்க மற்றும் அரச கொள்கைகள் பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்போம்.

நமது விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டுமானால் விவசாயத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும். மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதோடு, வெளிநாடுகளும் அதற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே எங்களுக்கு அறிவித்துள்ளன. இந்நாட்டு விளையாட்டு வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவுள்ளோம்.

இந்த நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்படுகிறது. இதற்கு 10 பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவாகலாம். இதற்காக நாங்கள் ஒரே தடவையில் பணத்தை செலவழிக்கப் போவதில்லை. நிதி கிடைக்க இருக்கும் நிறுவனங்களாகவே இவை ஆரம்பிக்கப்படுகின்றன. அதன் பின்னரே எமக்கு பிரதிபலன் கிடைக்கும்.

நமது 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் இத்துடன் முடிவடையவில்லை. எதிர்காலத்திற்காகவே அந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

மேலும், சில புதிய சட்டங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண்கள் சட்டம் தொடர்பிலான தேசிய ஆணைக்குழு, பாலின சமத்துவச் சட்டம், பெண்கள் வலுவூட்டல் சட்டம், ஆகிய இந்த 03 சட்டங்களைக் கொண்டு வந்தால், தெற்காசியாவிலேயே பெண்களின் பாதுகாப்பிற்காக அதிக நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடாக நமது நாடு திகழும்.

அதேபோன்று, சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், காடுகளை மீள உருவாக்கல் மற்றும் விருட்சப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை கொண்டு வரப்படும். இயற்கை வளப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் மகாவலி கங்கை, சிங்கராசவனம் , சிவனொளிபாத மலை, ஹோர்டன் சமவெளி, நக்கிள்ஸ், இராமர் பாலம் ஆகிய இடங்களுக்கு பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும்.

சமுத்திர வளங்களை ஆய்வு செய்தல் மற்றும் முகாமைத்துவத்துக்கான சட்டங்கள், முத்துராஜவெல (பாதுகாப்பு) சட்டம், இவை அனைத்தின் மூலமும் நமது நாடு இந்த பிராந்தியத்தில் சிறந்த சுற்றுச்சூழல் சட்டங்களைக் கொண்ட நாடாக மாறுகிறது. வருங்கால சந்ததியினர் இந்த வளங்களை பாதுகாத்துத் தருமாறே கேட்கின்றனர்.

மேலும், நாம் சமூக நீதி தொடர்பான ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். சமூக நீதிக்காக நாம் செயற்பட வேண்டும்.

இந்தத் திட்டங்களுக்கு மேலதிகமாக, இந்த ஆண்டு 75 நகர்ப்புற காடுகளை உருவாக்குவதற்கும், தேசிய இளைஞர் தளத் திட்டத்துக்கும் பணம் ஒதுக்க வேண்டும். அத்துடன், கொழும்பு மாவட்டத்திலும் கம்பஹா மாவட்டத்திலும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1996 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை காணப்பட்டாலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். இந்த 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நமது அரசியல் முறையை நாம் இப்போது மாற்றுவோம் என்று எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன். மக்களை துன்பத்திலிருந்து விடுவித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்த வரையறுக்கப்பட்ட அளவிலான வளங்களைக் கொண்டு இதுபோன்ற முன்னேற்றத்தை எங்களால் அடைய முடியுமென்றால், நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.