சட்டத்தரணிகளுக்கு எதிராக பீ அறிக்கை – விளக்கம் கோரினார் காவல்துறைமா அதிபர்

சட்டத்தரணிகள் குழாமொன்றுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் பீ (B) அறிக்கையை தாக்கல் செய்த வாழைத்தோட்டம் காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரிடம், காவல்துறைமா அதிபர் அறிக்கை கோரியுள்ளார்.
நீதித்துறையில் சட்டமா அதிபர் தலையிட்டதாக கூறப்படும் விடயத்தை கண்டித்து கடந்த 18 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு எதிராக வாழைத்தோட்டம் காவல்துறையினர் B அறிக்கையை தாக்கல் செய்தனர்.
பீ (B) அறிக்கையின்படி, சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, நுவன் போபகே மற்றும் சேனக பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று தேர்தல் சட்டங்கள் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தின் விதிகளை மீறி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக வாழைத்தோட்டம் காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதன்படி, காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அல்லது காவல்துறை தலைமையகத்தின் சட்டப் பிரிவுக்கு தெரியாமல் பீ அறிக்கையை தாக்கல் செய்தமைக்காக, சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் அறிக்கை கோரியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்தவை தடுக்க சட்டமா அதிபர் மேற்கொண்ட முயற்சிகளை கண்டித்து சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.