குத்துவிளக்கு சின்னத்திற்கான தேர்தல் அல்ல இது தமிழ் மக்களுக்கான தேர்தல்- சுரேந்திரன் குருசாமி
ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்ற மக்களும் பொது அமைப்புக்களும் சர்வதேசமும் இந்தத் தேர்தலிலே தனித்து நிற்பவர்களுக்கு வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது ஒற்றுமையாக இருப்பவர்ளுக்கு வாக்களித்து ஒற்றுமை என்ற மக்கள் கோரிக்கையைப் பலப்படுத்த போகிறார்களா? என்பதை இந்தத் தேர்தலின் முடிவுகள் தான் தீர்மானிக்கும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குத்துவிளக்கு சின்னத்திலே தமிழ் மக்களினுடைய ஒட்டுமொத்த தேசிய அரசியலைத் தொடர்ந்தும் கொண்டு செல்லும் நோக்கில் கூட்டமைப்பாக நமது மக்களுடைய, தமிழ் மக்களுடைய தாயக பிரதேசத்தில் இருக்கக்கூடிய அனைத்து பிரதேச, நகர சபைகளுக்கும் எங்களுடைய வேட்பு மனுவை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம்.
ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த அல்லது ஒரு பிராந்தியத்தைச் சேர்ந்த கட்டமைப்பல்ல தொடர்ச்சியான பலமான ஒரு பரந்துபட்ட கூட்டமைப்பாக நாங்கள் செயல்படுகிறோம் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இந்த நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும்.
இது ஐந்து கட்சிகளுக்கான அல்லது குத்துவிளக்கு சின்னத்திற்கான தேர்தல் மாத்திரமல்ல. இது தமிழ் மக்களுக்கான ஒரு தேர்தல் என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசிய பரப்பிலே செயலாற்றும் கட்சிகள் ஒற்றுமையாக வேண்டும், ஒன்றுபட வேண்டும் என்று தமிழ் மக்கள், பொது அமைப்புக்கள், சமூக கட்டமைப்புக்கள், புலம்பெயர் உறவுகள் எல்லோரும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசுக் கட்சி தன்னுடைய வீட்டுச் சின்னத்தோடு பிரிந்து சென்றிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் குத்துவிளக்கு சின்னத்திலே ஐந்து கட்சிகளை ஒருங்கிணைத்து ஒற்றுமையை நிலை நிறுத்தி இந்தத் தேர்தலிலே நாங்கள் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம் – என்றார்.
கருத்துக்களேதுமில்லை