தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாதற்கான காரணத்தை கூறினார் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யக்கூடாது என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் 2004 ஆம் ஆண்டு தெரிவித்ததாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “2010 இல் இருந்துதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என ஈ,பி.எல்.ஆர்.எவ். ஐச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரனும், சிவசக்தி ஆனந்தனும் முதலாவதாக முன்வைத்தார்கள்.
அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் ரெலோவும் இதனைப் பதிவு செய்யவேண்டும் என தெரிவித்திருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் 2004 ஆம் ஆண்டு 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டோம். அதில் நானும் ஒருவர்.
தேர்தல் முடிந்த பின்னர் நாம் முதன் முதலில் நாடாளுமன்றம் செல்லவில்லை. மாறாக கிளிநொச்சியிலே இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தான் சென்றோம். அதில் அவ்வியக்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலரும் இருந்தார்கள்.
அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனிடம் இரண்டு விடையத்தை நான் கேட்டிருந்தேன்.
முதலாவதாக கருணா குழுவிலே இருந்து வாகரையிலே உயிரிழந்த போராளிகளை மாவீரர் பட்டியலில் சேர்க்கவேண்டும், அதற்கு அவர் சம்மதித்தார்.
இரண்டாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும் என கேட்டேன். அப்போது அவர் தெரிவித்தது என்னவெனில் இக்கூட்டமைப்பை பதிவு செய்யக்கூடாது.
இதில் உள்ள நான்கு கட்சிகளுக்கும் தனித்தனியே கொள்கைகளும், கோட்பாடுகளும் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியே செயற்படலாம். தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செல்லலாம். அதனை இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதற்காகத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாம் பதிவு செய்யவில்லை. இதுதான் வரலாறு. இதனை மாற்ற முடியாது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை