மக்களின் அடிப்படை உரிமையை நீதிமன்றம் பாதுகாக்கும் – கிரியெல்ல நம்பிக்கை

அரசமைப்பிற்கு அமையவே முத்துறைகளும் செயற்பட வேண்டும். திறைச்சேரியின் செயலாளர், அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோர் அரசமைப்பைப் புறக்கணித்து அமைச்சின் சுற்றறிக்கையை பின்பற்றி தேர்தல் பணிகளுக்கு தடையேற்படுத்தியுள்ளார்கள்.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை மீள செலுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கட்டுப்பணத்தையும் அரசாங்கம் விழுங்கி விட்டது,அந்தளவிற்கு அரசாங்கம் வங்குரோத்து நிலை அடைந்துள்ளமை வெட்கமடைய வேண்டிய விடயம் எனவும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுக நகர முதலீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலைவரம் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இழுபறி நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தைக் கோரினோம், ஆனால் அதற்கு ஆளும் தரப்பினர் இடமளிக்கவில்லை. துறைமுக நகர முதலீடுகள் தொடர்பான சட்டமூல விவாதத்தின் போது நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கவுள்ளேன்.

நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். செலுத்திய கட்டுப்பணத்தை மீள வழங்கப் போவதில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசாங்கம் கட்டுப்பணத்தையும் விழுங்கி விட்டது, அந்தளவிற்கு வங்குரோத்து நிலை அடைந்து விட்டமை வெட்கப்பட வேண்டும்.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் உயர்நீதிமன்றத்தால் பாதுகாக்கப்படும். தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடு. தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,தேர்தல் செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்துவது 3 வருடகால சிறைத்தண்டனைக்குள்ளாகும் குற்றச்செயல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் அரசமைப்பிற்கு அமையவே அனைவரும் செயற்பட வேண்டும், ஆனால் அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் மற்றும் திறைசேரியின் செயலாளர் அரசமைப்பை புறக்கணித்து சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுகிறார்கள். கடனுக்கு வாக்குச்சீட்டுக்களை அச்சிட வேண்டாம் என சுற்றறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆகவே சுற்றறிக்கையை கொண்டு அரசமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகிறார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தடையேற்படுத்துவது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகக் கருதப்படும்.நாட்டு மக்களின் அடிப்படை உரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் மனித உரிமைகள் மீறப்படும் போது உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

உள்ளூரராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் உயர்நீதிமன்றம் அறிவிக்காது என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் வாக்குரிமையில் தங்கியுள்ளது என்பதை நீதிமன்றம் நன்கு அறியும், ஆகவே, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை வழங்கும். இந்த அரசாங்கம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால் அரசாங்கம் தேர்தலை பிற்போடும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்கிறது. தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற மட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கும் போது அதற்கு ஆளும் தப்பினர் ஒத்துiழைப்பு வழங்கவில்லை.

நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.