ஜனாதிபதி பாராளுமன்றத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறார் – ஹர்ஷ டி சில்வா
சர்வதேச நாணய நிதியத்தின் இறுதித் தீர்வு நாடாளுமன்றத்திடம் என குறிப்பிட்டு ஜனாதிபதி நாடாளுமன்றத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறார்.
நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் எவையும் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்காமல் இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை நாடாளுமன்றத்துக்கு பொறுப்பாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
விரிவான பேச்சுகளை முன்னெடுக்காமல் நிபந்தனைகளுக்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் இரு கட்டளைச்சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளும் பேச்சுகளை நிறைவு செய்து ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம். நாடாளுமன்றமே இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொள்ளும் பேச்சு தொடர்பான விவரங்கள் ஏவையும் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை, எந்த நிபந்தனைகளும் எமக்குத் தெரியாது, இவ்வாறான பின்னணியில் நாணய நிதியம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாடாளுமன்றத்தால் எவ்வாறு எடுக்க முடியும். ஜனாதிபதியின் கருத்து நாடாளுமன்றத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் தன்மையில் காணப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்பில் அரச வர்த்தக சங்கத்துடன் பேச்சுகளை மேற்கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் வர்த்தக சங்கத் தலைவருடன் வினவிய போது ஜனாதிபதியின் கருத்தை அவர் மறுத்துள்ளார்.
பொருளாதார மீட்சிக்கான கொள்கைத் திட்டத்தை எவரும் முன்வைக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிடுகின்றமை கவலைக்குரியது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்து வைத்தார். கடந்த ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பொருளாதார மீட்சி, கடன் மறுசீரமைப்புக்கான 10 குறுகிய கால யோசனைத் திட்டத்தை முன்வைத்தோம்,
பொருளாதார மீட்சிக்காக முன்வைக்கப்பட்ட 10 யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை. ஊழல் ஒழிப்பு, பொருளாதார ஸ்திரப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதும், அவற்றை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நடைமுறைப்படுத்திய தவறான பொருளாதார முகாமைத்துவத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் விரைவாக நாட வேண்டும் என 2020 ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்டோம்.
பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை, தேவையான அளவு வெளிநாட்டுக் கையிருப்பு உள்ளது. ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் குறிப்பிட்டார்கள்.
நாட்டின் பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்து முழு நாடும் தற்போது அதள பாதாளத்துக்குள் சென்றுள்ள போது பி.பி.ஜயசுந்தர, அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் காணாமல் போயுள்ளார்கள்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் பணவீக்கம் உயர்வடைந்திருக்காது, நாடும் வங்குரோத்து நிலை அடைந்திருக்காது.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு தற்போது சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர மாற்றுத் திட்டம் ஏதும் கிடையாது, நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.
நாணய நிதியத்திடம் அரசாங்கம் மேற்கொண்டுள்ள இணக்கப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விரிவான பேச்சுகளை முன்னெடுக்காமல் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை