காணிகளை கையேற்க தயக்கம் காட்டும் பொது மக்கள்!
இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக இடம்பெற்றாலும் சிறிது சிறிதாக காணிகள் விடுவிக்கப்படுகின்ற போதிலும் ஒரு இடர்பாடு காணப்படுகின்றது.
முகாம்களில் இருக்கின்றவர்களை நாங்கள் விடுவிக்கப்பட்ட இடங்களில் குடியேற்றக்கூடியவாறு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.
விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காணிகளை முழுமையாக கையேற்று அதனை உரிய பாவனைக்கு உட்படுத்தினால் மாத்திரமே தொடர்ச்சியாக காணிகளை விடுவிப்பதற்கு உதவியாக இருக்கும்.
விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் இருந்து வெளியேறியுள்ளனர். எனவே காணி உரிமையாளர்கள் தமது காணிகளை கையேற்கத் தவறுவதால் அந்த கட்டிடடப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்கின்ற நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை கையேற்பதன் மூலமே நாங்கள் மேலதிகமாக படையினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பொறுப்பேற்பதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை