எல்லை நிர்ணய குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய
உள்ளூராட்சிமன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை நாளை மறுதினம் (செவ்வாய்கிழமை) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய குழு மாவட்ட மட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ள பரிந்துரைகள், வௌ;வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய பரிந்துரைகள் மற்றும் தமது முன்மொழிவுகள் என்பவற்றைப் பரிசீலனை செய்து மாவட்ட மட்டத்திலான எல்லை நிர்ணய பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மாவட்டங்களுக்கு விஜயம் செய்து மேற்படி அறிக்கைக்குத் தேவையான பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய மார்ச் 31 ஆம் திகதிக்குள் எல்லை நிர்ணயம் தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மேலும் 6 மாவட்டங்களின் செயற்பாடுகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஏனையவற்றில் இரு மாவட்டங்களின் செயற்பாடுகள் மாத்திரமே 50 சதவீதத்தையும் விடக் குறைவாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எனவே, எமது முழுமையான அறிக்கையை எதிர்வரும் மார்ச் 25 – 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரித்து சமர்ப்பிக்கவும் , இடைக்கால அறிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். அதற்கமைய தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரத்து 800 இலிருந்து , 5 ஆயிரத்து 100 அல்லது 4 ஆயிரத்து 900 வரை குறைக்க முடியும் என்று நம்புகின்றோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை