வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ; இலங்கை இணங்கவில்லை என்கிறது அரசாங்கம்
சர்வதேச நாணய நிதியத்துடனான அண்மைய பேச்சுகளின் போது மீண்டும் 2.5 சதவீதத்தால் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இலங்கை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தால் வட்டி வீதங்களைக் குறைக்க முடியாது எனத் தெரிவித்த அவர் , வங்கி வட்டி வீதங்களின் அடிப்படையிலேயே பண வீக்க வீதமும் உள்ளடங்கியுள்ளதால் அது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் பங்களிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
வங்கி வட்டி வீதங்களைக் குறைப்பதாக சில அரசியல்வாதிகள் மக்களுக்கு உறுதிமொழியளிக்கின்றனர். அது அவர்கள் அறியாமையால் வெளியிடும் கருத்தாகும்.
நிதி சட்டத்துக்கமைய வங்கி வட்டி வீதங்களைத் தீர்மானிப்பது மத்திய வங்கியாகும். மத்திய வங்கியின் நிதி சபையின் ஊடாக எடுக்கப்படும் தீர்மானத்துக்கமையவே கொள்கை ரீதியிலான வட்டி வீதம் மற்றும் வங்கி வட்டி வீதம் என்பன தீர்மானிக்கப்படுகின்றன.
அதற்கமைய பண வைப்பாளர்களுக்கான வட்டி வீதம் மத்திய வங்கியாலேயே தீர்மானிக்கப்படுகிறது. திறைசேரியின் கடன் வழங்கல் செயற்பாடுகளின் போது வட்டி தொடர்பான தீர்மானங்களிலும் மத்திய வங்கியின் தலையீடு காணப்படும். மத்திய வங்கியின் வட்டி வீதம் நாட்டின் பணவீக்க வீதத்துடன் பிணைந்ததாகக் காணப்படுகிறது.
அதற்கமைய பணவீக்க வீதம் படிப்படியாக வீழ்ச்சியடையும் போது வட்டி வீதமும் வீழ்ச்சியடையும். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களும் வங்கி வட்டி வீதங்களைக் குறைக்குமாறு அரசாங்கத்தையே வலியுறுத்துகின்றனர்.
அவ்வாறு அரசாங்கத்தால் வட்டி வீதத்தைக் குறைக்க முடியாது. நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான ஆயுதமாகவே மத்திய வங்கியால் வங்கி வட்டி வீதம் பயன்படுத்தப்படுகிறது.
எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய வங்கியிடமே இதனை வலியுறுத்த வேண்டும். அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுகளின் போது மேலும் நூற்றுக்கு 2.5 சதவீதத்தால் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் இலங்கை தரப்பு அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை