வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று பாரிய பண மோசடி – பணியகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று (புதன்கிழமை) பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபா மோசடி செய்த சம்பவத்தில் முறைப்பாடுகளை ஏற்க வேண்டாம் என அமைச்சரின் தொடர்பு அதிகாரியால் வழங்கப்பட்ட உத்தரவு காரணமாக இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய 30 பேர் கொண்ட குழுவொன்று பணியகத்தின் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்றுள்ளனர்.
இதன் போது, பணியகத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் சம்பந்தப்பட்ட நபர், இதற்கு தொடர்புடைய முறைப்பாடுகளை ஏற்க வேண்டாம் என உத்தரவிட்டார் என பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கனேடிய தொழில் மோசடியில் சிக்கியவர்களின் முறைப்பாடுகளை பணியகம் ஏற்றுக்கொள்ளாததால் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கனடாவில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து ஒருவரிடம் இருந்து ஆறரை லட்சம் ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த மோசடியில் முப்பதுக்கும் மேற்பட்டோர் சிக்கினர் எனவும் பணியக அதிகாரி குறிப்பிட்டார். இந்த முறைப்பாடுகளை பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் ஏற்க மறுத்தமையால், பொலிஸ் நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து சென்றள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை