குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக கட்டுமானம் : முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக நீதிமன்ற அவதானிப்புக்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி இடம்பெற்று வரும் கட்டுமான பணிகள் தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்க்கனவே இருந்த AR/673/18 வழக்கானது இன்றையதினம் (02)நகர்த்தல் பத்திரம் இணைத்து நீதிமன்றில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதி ரி.சரவணராஜாவினால் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக நீதிமன்ற அவதானிப்புக்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளையாக்கி  வழக்கு விசாரணைகளை  30.03.2023 திகதிக்கு தவணையிட்டுள்ளார்.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்ப்பாட்டாளர்  ஞா.யூட் பிரசாந் ஆகியோர்  இன்று வழக்கு தொடுனர்கள்  சார்பில் முன்னிலையாகினர்.

இவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான  வி.எஸ்.தனஞ்சயன், சுபா விதுரன், ருஜிக்க  நித்தியானந்தராஜா உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் ஆறுபேர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை கேட்ட நீதிபதி இவ்வாறு கட்டளையை  பிறப்பித்தார் குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தொடுனர்  சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி   வி.எஸ்.தனஞ்சயன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் AR /673/18 என அழைக்கப்படும் குருந்தூர் மலை வழக்கில்  நகர்த்தல் பத்திரம் இணைத்து  கௌரவ நீதிமன்றத்திற்கு சமர்பணம் செய்துள்ளோம்.ஆதிசிவன்  ஐயனார்  ஆலயம் சார்பில் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் கௌரவ நீதிமன்றமானது மூன்று திகதிகளில் கட்டளையினை வழங்கியுள்ளது இறுதியாக 24.11.2022 அன்று கட்டளை வழங்கியது அதில் 12.06.2022 ஆம் ஆண்டு ஆலய சூழல் கட்டுமானங்கள் எவ்வாறு இருந்ததோ அந்த கட்டுமானங்கள் அவ்வாறே இருக்கவேண்டும் என்றும் மேலதிகமாக கட்டுமானங்கள் எவையும் இடம்பெறக்கூடாது என்று கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த கட்டளையினை மீறி தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களத்தினாலும், குறித்த ஆலயத்தினை சார்ந்த விகாராதிபதியாலும் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் ஒத்துளைப்புடன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக நாங்கள் புகைப்பட சாட்சிகள் ஊடாகவும் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையினை மீறி தற்போது கட்டுமானங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது என்கின்ற அடிப்படையில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகளுடன் சமர்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சமர்பணத்தில் குறிப்பிட்ட கட்டளையினை மீறும் வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற செயற்பாடானது நீதிமன்றத்தில் பொதுமக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையினை பாதிக்கும் செயற்பாடாக இருக்கின்றது என்றும் விசேடமாக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இதனை கேட்ட நீதிபதி அவர்கள் இது தொடர்பிலான மேலதிக அறிக்கை சமர்ப்பிக்க முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தொல்பொருள் திணைக்கள தலைவருக்கும் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.

மீளவும் இந்த வழக்கு  எதிர்வரும் 30 ஆம் திகதி அழைப்பதற்காக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது அன்று பொலிஸ் பொறுப்பதிகாரியும் தொல்பொருள் திணைக்களத்தின் தலைவரும் சட்டவிரோதமாக மேலதிகமாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதா அங்கு மேம்படுத்தல் வேலைகள் நீதிமன்ற கட்டளையினை மீறி இடம்பெற்றதா  என்பது தொடர்பில் அவர்கள் பதிலை வழங்குவதற்கா குறித்த  திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.