பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தேர்தலை பிற்போடவில்லை – நாலக கொடஹேவா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தியுள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் நாட்டின் முத்துறைகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தேர்தலை பிற்போடவில்லை என எதிர்க்கட்சிகளின் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று (02) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்; சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தில் பிணைமுறி விநியோகத்தில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் காரசாரமாக உரையாற்றி உண்மையை பொய் என நிரூபிக்க முயற்சித்து இறுதியில் தோல்வியடைந்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிணைமுறி விநியோகத்தில் இருமுறை மோசடி இடம்பெற்றுள்ளது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உட்பட பல்வேறு குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

தற்போதைய பொருளாதார பாதி;ப்புக்கு மத்திய வங்கி நிதி மோசடி ஒரு பிரதான காரணம் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறந்து விட்டார்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை மாத்திரம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. உலகில் அனைத்து நாடுகளும் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது.

பொருளாதார பாதிப்பு என்பதால் எந்த நாடும் தேர்தலை பிற்போடவில்லை.பூமியதிர்ச்சியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் மூன்று மாத காலத்திற்குள் தேர்தலை நடத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நாட்டில் தேர்தல் என்பதொன்று கிடையாது,தேர்தல் அறிவிப்பு உத்தியோகப்பூர்வமானது அல்ல என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தியுள்ளார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தினால் நாட்டின் முத்துறைகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை எந்த தேர்தலையும் நடத்த போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக புறக்கணித்தார்கள்.

தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இழந்த மக்கள் செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என ஜனாதிபதி கருதுவாராயின் அது ஒருபோதும் சாத்தியபடாது என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாராளுமன்ற மட்டத்தில் முன்னெடுப்போம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.