பிரதமர் தினேஷ் குணவர்தன ஆரம்பித்து வைத்தார் மெடிகேர்-2023 சர்வதேச மருத்துவ கண்காட்சி

கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா நினைவு கண்காட்சி கூடத்தில், மெடிகேர்-2023 எனும் பன்னிரண்டாவது சர்வதேச மருத்துவ கண்காட்சியை இன்று (03) பிரதமர் தினேஷ் குணவர்தன ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையில் ஆண்டுதோறும் தேசிய சுகாதார கண்காட்சி’ எனும் சர்வதேச அளவிலான சுகாதார கண்காட்சி நடைபெறுகிறது. இலங்கை சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் சர்வதேச அளவிலான தரத்துடன் திகழும் வைத்தியசாலைகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து நடைபெறும் பன்னிரண்டாவது ‘மெடிகேர் – 2023  தேசிய சுகாதார கண்காட்சி’ கொழும்பு ஸ்ரீமாவோ பண்டார நாயக்க நினைவு கண்காட்சி கூடத்தில் மார்ச் 3, 4, 5 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் 15,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தொழில் துறையில் முதலீடு செய்ய விரும்பும் பங்குதாரர்கள், மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள், மருத்துவத்துறை நிபுணர்கள், சர்வதேச அளவிலான வைத்தியசாலைகள்,  மருத்துவ சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை பங்குபற்றுகின்றன.

இந்த கண்காட்சியின் முதன்மை நோக்கம் பொதுமக்களுக்கு சரியான தருணத்தில் துல்லியமான தகவல்களை வழங்குவதுடன், மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பங்களையும் அளிப்பதாகும். சுகாதார சிக்கல்கள், நோய் தடுப்பு முறைகள், புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சாதனங்கள், சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய மாற்றங்கள், பயனுள்ள சிகிச்சை முறைகள். போன்றவற்றில் சர்வதேச அளவில் சிறந்த சேவை அளிக்கும் நிறுவனங்கள் பங்குபற்றுவதால் பொதுமக்களுக்கும் பயனளிக்கக்கூடிய கண்காட்சியாக இது திகழ்கிறது.

இந்த சுகாதார கண்காட்சியினை பிரதமர் தினேஷ் குணவர்தன தொடங்கி வைத்தார். இதன் போது சுகாதாரத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனா ரத்ன உள்ளிட்ட பல அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும், சுகாதாரத்துறை உயரதிகாரிகளும் பங்கு பற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் இலங்கையில் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு, நவீன சிகிச்சை மூலம் குழந்தை பேறு அளித்து அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமான சென்னை பிரசாந்த் வைத்தியசாலையின் நிர்வாகத் தலைவரும், மகப்பேறு மருத்துவ நிபுணருமான திருமதி கீதா ஹரிப்பிரியாவும் பங்கு பற்றினார்.

பிரசாந்த் வைத்தியசாலையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அரங்கிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் வருகை தந்து, பிரசாந்த் வைத்தியசாலையின் மருத்துவ சேவையினை பாராட்டினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.