அரசியலமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க ஒருபோதும் இடமளியேன் – ஜனாதிபதி

அரசமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க இடமளிக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக மக்களின் வாக்களிப்பு மூலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் ஒன்றை மாற்றியமைக்க முடியும்.

ஆனால் வீதி போராட்டங்களில் ஆட்சி மாற்றம் என்பது இனி ஒருபோதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிகளாலும் நாடு அராஜக நிலைகளை எதிர்கொள்ளும். எனவே நாட்டின் அரசமைப்பைப் போன்று பொருளாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செற்பட வேண்டும். பொருளாதாரத்தின் சிறந்த பலன்களை நாடும் மக்களும் வெகுவிரைவில் அனுபவிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

திருகோணமலை விமானப்படை தளத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் –

பாடசாலை கல்வியின் பின்னர் விமானப்படையில் இணைந்து இன்று பயிற்சிகளை நிறைவு செய்து பணிகளுக்கு திரும்பும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடமைகளின் போதும் தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாப்பதிலும் உறுதியாக இருந்து நாட்டுக்கு சேவையாற்றும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் உறுதிமொழி வழங்கிய போது நாட்டின் அரசமைப்பைப் பாதுகாப்பதாக உறுதியளித்தீர்கள். எனவே, நாட்டையும் நாட்டின் அரசமைப்பையும் பாதுகாப்பது உங்களது கடமையும் பொறுப்பும் ஆகும். ஏனெனில் நாடு இல்லை என்றால் அரசமைப்பு இல்லை.

எனவே, அரசமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க இடமளிக்கக் கூடாது. உங்களது உறுதிமொழிக்கு அமைய நாட்டின் அரசமைப்பு மற்றும் சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டு மக்களாணையுடைய அரசாங்கத்துக்கு விசுவாசமுள்ளவர்களாகப் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்றே அரசமைப்பின் முதலாவது சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அரசமைப்பு குடியரசுக்காகவே உள்ளது என்பது உறுதிப்படுகிறது. எனவே, அரசமைப்பின் ஏனைய அனைத்து பிரிவுகளும் மக்களின் இறையாண்மை, தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி என்பவற்றைப் பாதுகாப்பதற்கானதாகவே உள்ளன.

முதலில் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இறையான்மை, சுயாதீனம் மற்றும் சுதந்திர நாடாக இலங்கை இருக்கவேண்டும். இந்த நிலைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பிற்கும் சந்தர்ப்பம் அளித்து விடக் கூடாது.

இதுவே முதல் கடமையாகின்றது. நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும்.

1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. முப்படைகளும் பொலிஸாரும் உயிர் தியாகம் செய்து அந்த அச்சுறுத்தலான காலகட்டத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்தனர்.

எனவே நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதாயின் நாட்டு மக்களிடையிலான ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டும். தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் உட்பட அனைத்து இன மக்களிடையே இலங்கையர் என்ற ஒற்றுமை நிலை காணப்பட வேண்டும்.

அனைத்து இன மக்களினதும் மதம் மற்றும் கலாசாரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது பிளவுகள் ஏற்படுமாயின் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாகி விடும்.

அதேபோன்று நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கு சபை மற்றும் நீதிமன்றம் ஆகிய துறைகளில் இலங்கையின் சட்டபூர்வத்தன்மை கட்டமைக்கப்பட்டுள்ளது.

சட்டவாக்கு சபை ஊடாக நிறைவேற்றப்படும் சட்டங்களை செயற்படுத்தும் பொறுப்பில் நீதிமன்றங்கள் உள்ளன. பொதுவாகவே இந்த அனைத்துத் துறைகளுமே அரசமைப்பைப் பாதுகாக்க செயற்படுகின்றன. எனவே தான் அரசமைப்பைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாக உள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது. நாடாளுமன்றத் தேர்தலின்றி ஆட்சி மாற்றம் என்பது சாத்தியப்படாது.

நாடாளுமன்றத்தின் மறு இடமாக வீதியைக் குறிப்பிட இயலாது. கடந்த ஜுலை மாதத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் போது நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க செயல்பட்ட முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் மீண்டும் நன்றி கூறுகின்றேன்.

நாடாளுமன்றம் அற்ற நாடுகள் அழிவுகளையே சந்திக்கும். அதே போன்று தான் பொருளாதார சீரழிவுகளைக் கொண்ட நாடுகளும் பேரழிவுகளைச் சந்திக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தின் சுப நிலை தொடர்பாக பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச தரப்புகளுடன் கலந்துரையாடியுள்ளேன். அவற்றின் பலன்கள் விரைவில் மக்களுக்கு கிடைக்கும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.